திமுகவை வீழ்த்த விஜய் வருவாரா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடுத்த க்ரீன் சிக்னல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்கள், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மறைமுக அழைப்பு விடுத்துள்ளர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இது குறித்து மிக முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
திமுக எனும் தீய சக்தியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களது பிரதான இலக்கு. இந்த உன்னத நோக்கத்திற்காக, அதிமுகவின் தலைமையையும், கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டு எந்தக் கட்சி வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என ஜெயக்குமார் தெரிவித்தார். இதன் மூலம் தவெக-விற்கு அதிமுக கூட்டணிக்கு வர பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
தவெக தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா எனத் தவெக நிர்வாகிகள் ஆலோசித்து வரும் நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டியது அந்தக் கட்சியின் தலைமைதான். ஆனால், பலமான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வெற்றி எளிதாகும் என அவர் சூசகமாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: திமுக அரசுக்கு எதிராக அதிமுக போர்க்கொடி! மார்ச் 17-ல் மாநிலம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
பாஜக-வும் தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்பு தமிழகத்தின் எதிர்க்கட்சிக் கூட்டணியில் அதிமுகவே பெரிய அண்ணன் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது.
ஏற்கனவே அதிமுக தொண்டர்கள் மற்றும் தவெக தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் ஒருமித்த கருத்து நிலவி வரும் சூழலில், ஜெயக்குமாரின் இந்தப் பேச்சு அந்தப் பிணைப்பை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
விடியா திமுக அரசை அரியணையில் இருந்து அகற்ற எடப்பாடியார் தலைமையில் மெகா கூட்டணி அமையும்; அதில் இணைய விரும்புபவர்களுக்குக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் என அவர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு பாதுகாப்பில்லை! மார்ச் 15-ல் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!