×
 

கஸ்டடி மரணம்.. கல்லூரியிலும் கோரமுகம்! உடைபடும் நிகிதா பற்றிய உண்மைகள்..!

உயிரிழந்த அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த பெண் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு இருக்கும் நிலையில், கல்லூரி மாணவிகளும் புகார் அளித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் என்ற இளைஞர் மீது மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் கொடுத்தார். பத்து சவரன் நகை அவர் திருடியதாக கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோ ஒன்றில், தாங்கள் காரில் வந்ததாகவும் காரை அஜித்குமார் பார்க் செய்துவிட்டு வருவதாக கூறியிருந்ததாகவும் தனது தாய்க்கு ஸ்கேன் எடுக்க வேண்டி இருந்ததால் நகைகளை கழட்டி காரில் வைத்து விட்டு வந்ததாகவும் கூறினார். சாமி கும்பிட்டு விட்டு காரில் சென்ற போது நகையை காணவில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலுக்கு வந்து புகார் அளித்ததாகவும் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். 

இது தொடர்பான வீடியோ வைரலாகி இருந்த நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து நிகிதா தனது தாயாருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிகிதா தனது முகத்தை மறைக்காமல் பேசிய வீடியோ ஒன்று வெளியான நிலையில், மீண்டும் நடந்தவற்றை கூறியிருந்தார். அந்த வீடியோவிலும் பல சந்தேகங்கள் இருப்பதாக பொதுமக்கள் கூறிவந்தனர். ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு நிகிதா மீது பண மோசடி வழக்கு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு வேலை வாங்கி தருவதாக கூறி இலட்சக்கணக்கில் நிகிதா பண மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மேலும் நிகிதா தொடர்பாக அக்கம் பக்கம் இருப்பவர்களுக்கு நல்ல விதமான கருத்து கிடையாது என்றும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: #SORRY.. ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி..!

இப்படி இருக்கும் சூழலில், அஜித் குமார் மீது திருட்டு பட்டம் சுமத்திய நிகிதா புகார் கொடுத்ததும், திருமங்கலம் காவல் நிலைய போலீசார் இருக்கும்போது, தனிப்படை போலீசாரை வரவழைப்பதற்கு கட்டளையிட்ட உயர் அதிகாரி யார் என்ற கேள்வி தற்போது எழுந்தது. இந்த நிலையில், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியில் தாவரவியல் துறை தலைவராக பணியாற்றி வரும் நிகிதா மீது கல்லூரி மாணவிகளும் புகார் அளித்திருந்தது தெரியவந்துள்ளது. அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும், தான் செய்யும் தவறுகளை தட்டி கேட்பவர்களிடம் உன்னால் முடிந்ததை செய்து கொள் என்று நிகிதா திமிராக பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. தங்களை தேவையற்ற வார்த்தைகளால் நிகிதா வசை பாடுவதாக கூறி மாணவிகளும் ஏற்கனவே அவர் மீது புகார் அளித்துள்ளனர். கல்லூரியில் யாரையும் மதிக்காமல் நினைத்தால் நடப்பதாக பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மாணவிகள் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே பண மோசடி உள்ளிட்ட புகார்கள் அவர் மீது இருக்கும் நிலையில், கல்லூரி மாணவிகளும் புகார் அளித்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அஜித் குமார் விவகாரத்தை மேலும் தீவிரமடைய செய்கிறது. பணமோசடி உள்ளிட்ட பல விஷயங்களில் தொடர்புடைய நிகிதாவுக்காக தனிப்படை போலீசார் விரைந்தது ஏன் என்றும் 10 சவரன் நகைக்காக மூர்க்கத்தனமாக அடிக்க வேண்டியதன் அவசியம் என்ன எனவும் நிகிதா கூறிய புகாருக்கு சீருடை இல்லாமல் தனிப்பாடை போலீசாரை அனுப்பியது யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

இதனிடையே உண்மையிலேயே நகை திருட்டு நடந்ததா, அல்லது நிகிதா பொய் புகார் கூறினாரா, வேண்டுமென்றே அஜித் மீது திருட்டு பட்டம் சுமத்தி இருக்கிறாரா, நிகிதா தலைமுறைவாகி இருப்பதன் காரணம் என்ன, நிகிதாவுக்கு பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: #SORRY..ஐயா அவருக்கு அந்த நாகரிகம்-லாம் தெரியாதுங்க! சந்தடி சாக்கில் இ.பி.எஸ்-ஐ கலாய்த்த ரகுபதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share