" NO NEED" - மாற்றம் வேண்டாம் என கூறினாரா அஜித்? - சுரேஷ் சந்திரா பகிர்ந்த பரபரப்பு விளக்கம்...!
செய்தியாளர்களை சந்தித்த அஜித், மாற்றம் தேவையா? என்ற கேள்விக்கு No Need என பதில் அளித்ததாக தகவல்கள் பரவின.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலேயே முதல் ஆளாக நடிகர் அஜித் வாக்களித்தார். சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு இன்று காலை 6.50 மணிக்கு, வெள்ளை நிற கோட்டுடன், கருப்பு நிற கண்ணாடி அணிந்தபடி காரில் வருகை தந்த அஜித்தை, அங்கிருந்த ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. அதனைத் தவிர்க்க, அங்கு பாதுகாப்பிற்கு இந்த போலீசார் அஜித்குமாரை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் சென்றனர். அவரை பின் தொடர்ந்து ரசிகர்களும் பெருமளவில் வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியதோடு, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே அஜித்குமாரை வாக்களிக்க அனுமதித்தனர். தொடர்ந்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அஜித், பின்னர் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக 7 மணிக்கு தொடங்கிய நிலையில், தமிழகத்திலேயே முதல் ஆளாக அஜித்குமார் 6.54 மணிக்கு வாக்களித்தார்.
வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரை சூழ்ந்து கொண்ட அவரது ரசிகர்கள் “வாழு வாழ விடு” போன்ற கோஷங்களை எழுப்பினர். பேரிறைச்சல் காரணமாக தனது காதுகளை மூடிக்கொண்ட அஜித்குமாரை, போலீசார் பாதுகாப்பாக மீண்டும் காரில் ஏற்றி அனுப்பிவைத்தனர். அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அஜித், "மாற்றம் தேவையா?" என்ற கேள்விக்கு "No Need " என பதில் அளித்ததாக தகவல்கள் பரவின. அதாவது அஜித்குமார் திமுகவிற்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்ததாக தீயாய் செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல்கள் தொடர்பாக நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். அதில், "நடிகர் அஜித்குமார் 'No Need to Change' என்று எதுவும் கூறவில்லை. அவர் அப்படியான எந்த கருத்தையும் வெளியிடவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்... வெள்ளை நிற கோர்ட் சூட்டில் இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?
அதேபோல் அஜித்குமார் பேட்டியளித்ததாக சோசியல் மீடியாவில் வைரலான தங்களது நிறுவனத்தின் செய்தி கார்டு தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அஜித்குமார் மாற்றம் தேவையில்லை எனக்கூறியதாக தங்கள் நிறுவனம் எந்த செய்தியையும் பகிரவில்லை என்றும், அந்த கார்டு போலியானது என்றும் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் ஓட்டு... தல ஓட்டு... முதல் ஆளாக வாக்களித்த அஜித்... ரசிகர்களால் வாக்குச்சாவடிக்குள் களேபரம்...!