அஜித் குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... திடுக்கிடும் தகவல்கள்!
அஜித் குமார் மரணம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த ஒரு பக்தரின் 10 பவுன் நகை மற்றும் பணம் காணாமல் போனதாக புகார் எழுந்தது. இந்த புகாரில், கார் சாவியை பார்க்கிங் செய்ய அஜித் குமாரிடம் கொடுத்ததாகவும், பின்னர் நகை காணாமல் போனதாகவும் கூறப்பட்டது. இதனால், அஜித் குமார் மீது சந்தேகம் விழுந்து, கோவில் நிர்வாகத்தினரால் அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கு தொடர்பாக ஜூன் 27 அன்று மானாமதுரை குற்றப்பிரிவு காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித் குமாரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். உடலில் 50 இடங்களில் அஜித் குமாருக்கு காயங்கள் இருந்ததாகவும் மூளை உள்ளிட்ட பல இடங்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் மீது காவலர்கள் கடுமையான தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகள் மற்றும் லத்தி ஆகியவற்றால் தாக்கப்பட்டதாகவும், அவரது முகம் மற்றும் ஆண் உறுப்பில் மிளகாய் பொடி தூவப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அஜித் குமார் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 காவலர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஜெயில்ல போட்டாலும் பிரச்சனை இல்ல.. தடையை மீறி போராடுவேன்.. சீமான் திட்டவட்டம்..!
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது. சாதாரண கொலையே இல்லை, இதே கொலை செய்துள்ளார்கள் என்று கூறிய நீதிமன்றம், காவலர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது கண் துடைப்பு என்றும் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியது. மேலும் அஜித் குமார் கொலை சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டதாகவும், பணம் கொடுத்து பிரச்சினையை மூடி மறைக்க பார்த்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது
இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் அஜித் குமார் உடலை பெற்றுக் கொள்ளுமாறும் பணம் தருவதாக கூறி கட்டப்பஞ்சாயத்து செய்ததாகவும் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து உள்ளார். கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை விசாரணைக்கு வருகிறது. அஜித் குமார் கொலை உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் தாக்கியதில் கடும் உடல் நல பாதிப்பு...அஜித் குமார் தம்பி நவீன் அவசர பிரிவில் அனுமதி!