×
 
☰

"ஸ்மார்ட் மீட்டர்"..! தனியாருக்கு தாரைவார்ப்பதா.? யாருக்கான அரசு..? TTV தினகரன் கேள்வி..!!

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் விவகாரத்தை சுட்டிக்காட்டி டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை கண்டித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 12 மண்டலங்களில் மறுசீரமைக்கப்பட்ட மின்விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில் மற்றும் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கப்படும் என்ற நிதிநிலை அறிக்கை அறிவிப்பை மின்சார வாரியமே செயல்படுத்த முன்வராமல், தனியாருக்கு ஒப்படைக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று தினகரன் தெரிவித்தார். இந்த முடிவால் குடியிருப்புகளுக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரமும், விவசாயம் மற்றும் நெசவுத் தொழிலுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என்பதோடு, மின்சார வாரியத்தில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் பறிபோகும் சூழல் உருவாகும் என மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் இதேபோன்று ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அமல்படுத்தியபோது, ரீசார்ஜ் செய்யத் தவறினால் மின் துண்டிப்பு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடிக் கொண்டிருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ப்ரீபெய்ட் திட்டமா அல்லது போஸ்ட்பெய்ட் திட்டமா, தமிழக மக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடருமா, பீக் அவர் நேரத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமா, ஏற்கனவே உள்ள 3 கோடி மீட்டர்களின் நிலை என்ன என்பன உள்ளிட்ட மின் நுகர்வோரின் எந்தவொரு கேள்விக்கும் பதில் அளிக்காமல், மொட்டைக் கடுதாசி போல டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக தினகரன் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: எகிறும் விலைவாசி... அலட்சியமாக வேடிக்கை பார்ப்பதா.? தவெக அரசை வெளுத்த TTV தினகரன்..!!

ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஐந்து மாதங்களில் தூய்மைப் பணிகள் தொடங்கி, குடிநீர் விநியோகம், அரசுப் பேருந்துகளுக்கான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம், பாதாளச் சாக்கடைத் திட்டம், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் என தமிழகத்தின் அனைத்துப் பணிகளையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, திமுக அரசு யாருக்காக ஆட்சி நடத்தப்போகிறது என்ற கேள்வி ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளதாக அவர் கூறினார். தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதோடு, இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் கேள்விக்குறியாக்கும் சென்னை உட்பட 12 மண்டலங்களில் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என திமுக அரசை தினகரன் வலியுறுத்தினார்.

 

இதையும் படிங்க: புதிய எண்ணெய் கிணறுகள்.. கேள்விக்குறியாகும் மீனவர்கள் வாழ்க்கை.. TTV தினகரன் வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share