×
 

‘தவெக அல்ல.. தற்குறி வெற்றிக் கழகம்!’ விளாசிய டிடிவி தினகரன்.. பரபரப்பை கிளப்பிய பேச்சு!!

இவர்களைத் தற்குறிகள் என்றால் சரியான உதாரணம். சட்டமன்றம் 23-ஆம் புலிகேசி படம் போல உள்ளது” என்றார். 

தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் என்பதற்குப் பதிலாக ‘தற்குறி வெற்றிக் கழகம்’ என்று பெயர் வைத்துக்கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். தாய்மொழி தமிழைக்கூட சரியாகப் படிக்கவோ பேசவோ தெரியாதவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், தவெகவின் 100 நாள் ஆட்சி சினிமாப் படம் பார்ப்பதுபோல இருப்பதாகக் குறிப்பிட்டார். “எதார்த்தமான ஆட்சிக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இன்ஸ்டாகிராம் ரீல்கள் மூலம் இளைஞர்களையும் இளம்பெண்களையும் கவர்ந்தனர். தேர்தலுக்கு முன் மாபெரும் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் என வாக்குறுதிகள் அளித்தனர். ஆனால் அவர்களே ஆட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்காத நிலையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்” என்றார்.

தமிழ்நாடு ஜனநாயக நாடு என்பதால் யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வர உரிமை உண்டு என ஒப்புக்கொண்ட அவர், சினிமா கதாநாயகன் மீதான நம்பிக்கையில் படித்த இளைஞர்களும் இளம்பெண்களும் மட்டும் வாக்களிக்காமல், குடும்பத்திலுள்ள தாத்தா, பாட்டி, பெற்றோரை வற்புறுத்தி வாக்களிக்கச் செய்ததாகக் குறிப்பிட்டார். இதனால் வருத்தம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.134 கோடி குறுவை தொகுப்பு எங்கே?: தவெக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்!

தவெக அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் அடிப்படை அறிவு குறித்து கேள்வி எழுப்பிய டிடிவி, “தாய்மொழி தமிழைக்கூட ஒழுங்காகப் பேசத் தெரியவில்லை. அ-ஆ கூடத் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. இவர்களைத் தற்குறிகள் என்றால் சரியான உதாரணம். சட்டமன்றம் 23-ஆம் புலிகேசி படம் போல உள்ளது” என்றார். 

மதுரை வடக்கு தொகுதி உறுப்பினர் கல்லணை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டும் எனக் கூறியதை உதாரணமாகக் காட்டினார். மேலும், ஆதவ் அர்ஜுனா மில்லி லிட்டர் என்பதை மில்லி மீட்டர் எனத் தவறாகச் சொன்னதாகவும், தமிழ் பேசத் தெரியாதவர்களைக் கிறிஸ்தவ மதம் என நிதியமைச்சர் குறிப்பிட்டதாகவும் அவர் விமர்சித்தார். விஜய்யின் மதத்திற்கும் மொழிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கேள்வி எழுப்பினார். 

சபாநாயகர் நடுநிலையாக இருப்பதுபோல நடித்து அமைச்சர்களைத் தவறான கருத்துகளைப் பேச வைப்பதாகவும் குற்றம்சாட்டினார். “மாற்றம் வேண்டும் என இளைஞர்கள் சினிமாக் கவர்ச்சியை நம்பி வாக்களித்தனர். விஜய் வெற்றிபெற்றது நியாயம்தான். ஆனால் அவர்களது வேட்பாளர்களை எப்படி வெற்றிபெற வைத்தார்கள்?” எனக் கேட்ட அவர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது வருத்தம் இல்லை; வாக்களித்த மக்களை நினைத்துத்தான் வருத்தம் என்றார். 

இது மோசமான, இருண்ட ஆட்சி எனவும், அடிப்படைத் தமிழ் அறிவே இல்லாத நிலை தொடரும் எனவும் எச்சரித்தார். “உங்களை விமர்சிப்பதே அசிங்கமாக உள்ளது. இதற்கு முடிவு வரும்” என முடித்தார்.

இதையும் படிங்க: வாரத்திற்கு வாரம் நிலைப்பாட்டை மாற்றுவதா? முதல்வர் விஜய்க்கு டிடிவி தினகரன் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share