×
 

கொலைக்களமாக மாறுகிறதா தமிழகம்.? வேடிக்கை பார்க்கும் தவெக அரசு... விளாசிய TTV தினகரன்..!!

தமிழ்நாடு கொலைக்களமாக மாறுகிறதா என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்து வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு கொலைக்களமாக மாறி வருகிறதா என்றும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்லாவரத்தில் விசிக நிர்வாகி வெட்டிக்கொலை, கூடங்குளம் அருகே ரவுடி தலை துண்டித்துக் கொலை, நெல்லை அருகே இளைஞர் படுகொலை, சேலம் அருகே பெண் துண்டு துண்டாக வெட்டிக்கொலை, கள்ளக்குறிச்சியில் தன் வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி கொலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் படுகொலைச் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கியதோடு, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதே அரசு நிர்வாகத்தின் அடிப்படைக் கடமை என்பதை மறந்து, ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த நிலையிலும் இன்னும் கும்பகர்ணத் தூக்கத்திலேயே இருக்கும் திமுக அரசால், பொதுமக்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாடவே அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறும் குற்றச் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி, சட்டம்–ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள், சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய பதிலளிக்காமல் வேண்டுமென்றே சர்ச்சைகளை உருவாக்கி, அவையின் நேரத்தை வீணடிப்பதிலுமே கவனம் செலுத்தி வருவது வெட்கக்கேடானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: சிக்கலில் சோழவந்தான் MLA..! ஜல்லிக்கட்டுக்கு தடையா..? TTV தினகரன் சரமாரி கேள்வி.!

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி, தன் வசம் உள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மானியக் கோரிக்கைகளைக்கூட மற்ற அமைச்சர்களைத் தாக்கல் செய்யச் சொன்ன முதலமைச்சர், தற்போது சீரழிந்திருக்கும் சட்டம்–ஒழுங்கு குறித்து எந்தவிதக் கவலையும் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது, காவல்துறையையும் மற்றவர்களிடம் ஒப்படைத்துவிட்டாரோ என்ற சந்தேகம் எழுவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, கொலைச் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, சட்டப்படி கடுமையான தண்டனை பெற்றுத்தருவதோடு, தமிழகத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றிருக்கும் சட்டம்–ஒழுங்கு நிலை குறித்து கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜயை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

 

இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு தினகரன் ‘ஸ்கெட்ச்’? பழனிசாமிக்கு நெருக்கடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share