×
 

சாதிவாரி கணக்கெடுப்பு!! டிச., 17 சென்னையில் போராட்டம்! அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி அதிரடி அழைப்பு!!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புகோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்துக் கட்சிகளுக்கும் பாமக தலைவர் அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீயாய் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

திமுகவைத் தவிர்த்து மற்ற எல்லாக் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், தமிழக அரசியல் களத்தை ஒரே நாளில் புயலாக மாற்றியுள்ளது. “69% இட ஒதுக்கீட்டைத் தக்க வைக்க வேண்டுமானால் சாதிவாரி சர்வே ஒன்றே வழி. அதைத் தடுப்பது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம்” என்று அன்புமணி கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது; 1931-க்குப் பிறகு தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பே நடத்தப்படவில்லை. அதாவது 95 ஆண்டுகளாக நாம் பயன்படுத்தும் புள்ளிவிவரங்கள் பிரிட்டிஷ் காலத்தையே சார்ந்தவை! உச்சநீதிமன்றம் 2010-ல் “ஒரு ஆண்டுக்குள் சாதிவாரி சர்வே நடத்து” என்று ஆணையிட்டும், அடுத்தடுத்த அரசுகள் அதைத் தட்டிக் கழித்தன. இப்போது 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் உயிர்த்தெழுந்திருக்கிறது. “புதிய புள்ளிவிவரம் இல்லாவிட்டால் எந்த நிமிடமும் 69% ரத்தாகலாம்” என்று அன்புமணி எச்சரிக்கிறார்.

இதையும் படிங்க: கோயில் நகரம் இனி தொழில் நகரம்! இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்து துவங்குங்கள்! ஸ்டாலின் பளீச்!

“திமுக 36 ஆண்டுகளாக சமூகநீதிக்கு எதிராக சதி செய்கிறது” என்று நேரடியாகக் குற்றம் சாட்டியிருக்கும் அன்புமணி, பிகார், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே சாதிவாரி சர்வே நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அதிகரித்ததை எடுத்துக்காட்டாக வைக்கிறார்.

“2008 சட்டப்படி மாநில அரசுகளுக்கே சர்வே நடத்த அதிகாரம் உண்டு. உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்துவிட்டது. ஆனால் திமுக ‘மத்திய அரசுதான் நடத்த வேண்டும்’ என்று பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறது” என்று கொதிக்கிறார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு கொண்டு வர ஒரே வழி சாதிவாரி சர்வேதான் என்பதை வலியுறுத்தும் அன்புமணி, “தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் சர்வே முடிக்க முடியும். நிதியும், மனிதவளமும் இருக்கிறது. விருப்பம்தான் இல்லை” என்று வெட்ட வெளிச்சமாக்குகிறார்.

இதை வெறும் கடிதமாக விட்டுவிடவில்லை அன்புமணி. டிசம்பர் 17-ம் தேதி சென்னையில் மாபெரும் முழக்கப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். “சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்” என்று திறந்த அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு வளர்ச்சி! முதலீட்டாளர் மாநாடு! ரூ.36,660 கோடி முதலீட்டில் 56,766 பேருக்கு வேலை! 91 ஒப்பந்தம் கையெழுத்து!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share