"அராஜகம்"..! மக்கள் பாடம் புகட்டுவாங்க..! மார்க்கண்டேயன் கைது... அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்.!!
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கண்டித்து உள்ளார்.
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V.மார்க்கண்டேயன் இன்று அதிகாலையில் தவெக அரசின் காவல்துறையால் அராஜகமான முறையில் ஜனநாயக விரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இச்செயல் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.
விளாத்திகுளம் தொகுதி மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்று மக்கள் ஊழியராக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார் என்றும் அனைத்து தரப்பு பொதுமக்களிடம் நல்ல உறவை பராமரித்து வரும் மார்க்கண்டேயன் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ வாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். நமது நாட்டின் அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம் பேச்சுரிமை தனிமனித உரிமை என எல்லாவற்றையும் அராஜகமான முறையில் மீறுகிறது தவெக அரசு என்றார்.
விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியற்ற அரசு கைது செய்வதன் மூலம் திமுகவினரை அடக்கி விடலாம் என்று பகல் கனவு காணுகிறது என்றும் எந்த வகையிலும் அச்சுறுத்தி பணிய வைக்கலாம் என்ற எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வன்புணர்ச்சி செய்தவர்களை காப்பாற்றுவதாக சொந்த கட்சியைச் சார்ந்த பெண் புகார் கொடுத்தும் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் இவ்விபரத்தை எழுப்பியும் அந்த எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு திமுக உறுப்பினர்களை அராஜகமான முறையில் கைது செய்கிறது என அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 6 மாதத்தில் ஆட்சி மாற்றம்... திமுகவுக்கு தாவும் தவெக எம்.எல்.ஏ.க்கள்... பகீர் கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்...!
மாநிலம் முழுவதும் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க கைது விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் தொடர் கதையாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டார். சர்வாதிகார முறையில் செயல்படும் தவெக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று உறுதிப்பட தெரிவித்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!