அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை... நள்ளிரவில் மாஜிஸ்திரேட் பிறப்பித்த அதிரடி உத்தரவு... நடந்தது என்ன?
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவரை சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.
திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் 20-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவரது தரப்பில் ஜூலை 10-ஆம் தேதி ஆஜராக இருப்பதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், விசாரணைக்கு சென்றால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதிய அனிதா ராதாகிருஷ்ணன், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: "போலீஸ் காரில் தான் வரணும்"..! அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது..! திமுகவினர் சாலை மறியல்..!
கைது செய்யப்பட்ட பின்னர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், நள்ளிரவில் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிதம்பரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்கவே கைது செய்யப்பட்டதாகவும் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு தரப்பு வழக்கறிஞர், மருத்துவக் காரணங்களால் உடனடியாக ஆஜராக முடியவில்லை என்றும், இந்த வழக்கில் நீதிமன்றக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அரசியல் நோக்கத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றக் காவலில் அனுப்ப மறுத்து, ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையுடன் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், தொடர்ந்து 10 நாட்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் விதித்தார்.
இந்த உத்தரவு வெளியானதும், நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் கைதட்டி, விசில் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், “திமுகவினர் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் எங்களை அரசியல் ரீதியாக வீழ்த்த முடியும் என்று யாரும் நினைக்க வேண்டாம். தற்போதைய அரசு இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஆட்சியில் நீடிக்காது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரொக்கம் தாண்டி 'ஜி-பே' லஞ்சம்! தமிழகத்தையே உலுக்கிய DVAC மெகா ஆபரேஷன்!