குழித்தோண்டி பொதச்சுட்டீங்க! பல் இளிக்குது திமுக லட்சணம்... விளாசிய அண்ணாமலை
சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிடுவதாக வெளியான தகவலை அண்ணாமலை விமர்சித்தார்.
கடந்த 2021 - 22 முதல் 2025-26 வரையிலான திமுக அரசின் அறிவிப்புகளின் நிலவரம் குறித்த தகவலை அண்ணாமலை பகிர்ந்தார். அதில், மொத்தமாக 8,634 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 4,516 அறிவிப்புகள் அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலில் இருப்பதாகவும், 3,455 அறிவிப்புகள் குறித்து அரசாணை உடன் பணிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனுமதிக்காக 26 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நிலுவையில் இருப்பதாகவும், 256 அறிவிப்புகள் கைவிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 381 அறிவிப்புகள் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 256 அறிவிப்புகள் கைவிடப்படும் சம்பவம் தொடர்பாக திமுக அரசை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, நான்கு ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தற்போது, சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை என்பதால், கைவிடுவதாக முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட முழுமையாக நிறைவேற்றாமல், நாளொரு நாடகத்தை அரங்கேற்றிக்கொண்டிருந்த திமுக அரசின் லட்சணம், ஆட்சியின் இறுதி ஆண்டில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! அதிமுகவுடன் இணைந்து அனல் பிரச்சாரம்... அண்ணாமலை அறிவிப்பு
சொன்னதையும் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாகவும், எதையும் செய்யவில்லை என்பதற்கான சாட்சி, கைவிடப்பட்ட இந்த 256 அறிவுப்புகள்தான் என்றும் கூறினார். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராக அவரது தந்தையின் சிலை வைத்தது மட்டும் தான் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அச்சச்சோ!! அண்ணாமலைக்கு என்னாச்சு... வீட்டிற்குள் முடங்க இதுதான் காரணமா?