நாங்குநேரி வெறியாட்டம்..!! கடைசி நாள் வரைக்கும் மக்களைத் திணறடிக்கும் திமுக... அண்ணாமலை கண்டனம்..!
நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை கடுமையாக திமுக அரசை சாடினார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி அருகேயுள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு டீக்கடை முன்பு சிலர் வழக்கம்போல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். திடீரென இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட மர்மக் கும்பல் அங்கு தாக்குதல் நடத்தியது. இவர்கள் அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை ஏந்தி வந்திருந்தனர்.
கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், டீக்கடை முன் இருந்தவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஜான் என்ற உள்ளூர் நபர், மற்றொருவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 6 பேர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். இந்த ஊழல் நிறைந்த திமுக அரசின் கீழ் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலை இதுதான் என்றும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் 65,000 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவும், 8000 கிலோவுக்கும் அதிகமான செயற்கை போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்கள் மாநிலத்தில் எந்த அளவுக்கு ஊடுருவியுள்ளன என்பதைக் காட்டுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடுதான் நம்பர் ஒன்.!! டப்பா என்ஜின் மாநிலங்களில் வளர்ச்சியை காட்ட முடியுமா? சவால் விட்ட முதல்வர்..!!
இந்த புள்ளிவிவரங்கள் பிடிபட்டதை மட்டுமே குறிக்கின்றன என்றும் கட்டுப்பாடில்லாமல் நழுவிய மிகப்பெரிய அளவை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும் எனவும் கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசின் டாஸ்மாக் சேகரிப்பு 2.2 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது, இது மாநிலத்தில் தாராளமாகப் பாயும் மதுவின் அளவைக் குறிக்கிறது என்று தெரிவித்த அண்ணாமலை, கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தை பாதித்த வன்முறை மற்றும் சட்டமின்மையை நினைவூட்டி, திமுக அரசு அதன் இறுதி நாட்களில் கூட, தமிழக மக்களை தொடர்ந்து மூச்சுத் திணறடித்து வருகிறது எனவும் கடுமையாக சாடியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் கடந்துதாங்க போகணும்... இங்க எல்லாமே நடக்கும்..!! அண்ணாமலை சப்போர்ட்..!!