பிரதமர் மோடியை சந்திக்கும் அண்ணாமலை!! பாஜக தலைமையுடன் சமரசமா? தனிக்கட்சியா?
பிரதமர் மோடியைச் சந்திக்க பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி: தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க நேரம் கோரியுள்ளார். இன்று (ஜூன் 4) அவரது பிறந்தநாள் என்பதால், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகக் காவல் துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அண்ணாமலை, 2019-ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2020-ல் பாஜகவில் இணைந்தார். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அவர், தீவிர அரசியல் பணியாற்றினார். திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை தனித்துப் போட்டியிடச் செய்து சுமார் 5 சதவிகித வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார். 2024 மக்களவைத் தேர்தலில் தனி அணி அமைத்து 18 சதவிகித வாக்கு வங்கியை உருவாக்கினார். பாஜகவுக்கு 11.3 சதவிகித வாக்குகள் கிடைத்தபோதும், கூட்டணி இல்லாததால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இதையும் படிங்க: தனிக்கட்சியா? பாஜகவா?... இறுதி முடிவெடுத்த அண்ணாமலை... நாளை வெளியாகிறது அறிவிப்பு?
இதையடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டபோது, அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இது பாஜகவுக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தலில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, வெறும் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் தலைவர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் உள்ளிட்டோர் தோல்வியைத் தழுவினர்.
இந்தச் சூழலில், பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக அண்ணாமலை பெயரில் தகவல்கள் பரவின. இதைத் தொடர்ந்து டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நட்டாக், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பொதுச் செயலர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று பிரதமர் மோடியைச் சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார். பிறந்தநாள் சந்திப்பாக இது அமையும் என்றும், பிரதமரின் இறுதி முடிவுக்காக அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்டதா அல்லது அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா என்பது இன்று பாஜக தலைமை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து நாளை தமிழகம் திரும்பும் அண்ணாமலை, சென்னை வந்ததும் தனது அடுத்தகட்ட முடிவை அறிவிக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் முக்கிய திருப்புமுனையாக இந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்த அண்ணாமலை...? - தேனி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...!