பிரம்மாண்டமாக நடைபெறப்போகும் தவெக மாநில மாநாடு.. ஒருங்கிணைப்பு குழுக்கள் அறிவிப்பு..!!
தவெக மாநில மாநாட்டிற்கான 5 ஒருங்கிணைப்பு குழுக்களுக்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து தவெக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தி பகுதியில் வரும் 21ம் தேதி மாலை 4 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு தமிழகம் முழுவதிலிருந்து 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய, 420 ஒலிபெருக்கிகள், 20,000 மின் விளக்குகள், 200 அடி நீளமுள்ள பிரமாண்ட மேடை, மற்றும் CCTV கேமராக்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் வசதிக்காக, 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த பாட்டில்களில் விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதாகவும், தொண்டர்கள் குடிநீருக்கு தவிக்காமல் இருக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 400-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள், 100-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள், மற்றும் மூன்று இடங்களில் வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "MY TVK".. தவெக உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய App.. நாளை வெளியிடுகிறார் விஜய்..!!
காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, விநாயகர் சதுர்த்தி காரணமாக மாநாடு ஆகஸ்ட் 25-லிருந்து 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. மகளிர் பாதுகாப்பு மற்றும் குப்பை குவியாமல் தடுப்பதற்கு விஜய் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளார். மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் உத்திகள் மற்றும் செப்டம்பர் மாத சுற்றுப்பயணம் குறித்து விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையின் அரசியல் முக்கியத்துவம் மற்றும் விஜயின் பிரச்சாரம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாநாட்டிற்கான ஏற்பாட்டுக் குழுவை தவெக தலைமை அறிவித்துள்ளது. இந்த மாநாடு, கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் ஆதரவை வலுப்படுத்துவதற்கும் முக்கியமான தளமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டிற்கான ஏற்பாட்டுக் குழுவில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் மாநிலச் செயலாளர் சி.விஜயலட்சுமி, மாவட்ட கழகச் செயலாளர் ஏ.விஜய் அன்பன் உள்ளிட்ட பலர் முக்கியப் பொறுப்புகளை ஏற்றுள்ளனர். இவர்களுடன், மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் இணைந்து மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஒருங்கிணைப்பு மற்றும் தேர்தல் பிரசார மேலாண்மைப் பணிகளை மேற்பார்வையிடுவார்.
மாநாட்டில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய கொள்கைகளான தமிழ் தேசியம், பெரியாரின் திராவிடக் கொள்கைகள், சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பகுத்தறிவு சிந்தனை ஆகியவை வலியுறுத்தப்படும். மதுரை மாநாடு, பிரம்மாண்டமான அரங்க அமைப்பு மற்றும் கூடுதல் உற்சாகத்துடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்தில் தவெக-வின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: தமிழர்களின் பெருமையை அடகு வைத்திருக்கிறது திமுக அரசு.. தவெக தலைவர் விஜய் கடும் சாடல்..!!