பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!
தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்துள்ள SDPI மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பணி நிரந்தரம் மற்றும் முறையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்னிறுத்தித் தொடர்ச்சியாக அறவழியில் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்துள்ள கொடூர நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கையில், ஊரையும் நகரத்தையும் தூய்மைப்படுத்தி மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உணர்வுபூர்வமாக அணுக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். பல்லாண்டுகளாகத் தற்காலிக முறையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் இந்த எளிய தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வுக் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை; அவற்றை நிறைவேற்றித் தருவதற்குப் பதிலாக, ஜனநாயக வழியில் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்டுக் கைது செய்வது ஏற்புடையதல்ல என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு குட் நியூஸ்..! ரூ. 20 லட்சம் பிணையில்லா கடன்.. விஜய் அரசின் மெகா அறிவிப்புகள்..!!
எனவே, கைது நடவடிக்கைகளால் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களை முடக்கும் போக்கினை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள நெல்லை முபாரக், கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் பிரதிநிதிகளை நேரில் அழைத்து முறையான அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடத் தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: வாய்ப்பே இல்ல.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.!