நள்ளிரவில் நடக்கும் அவலம்... சமூகநீதி மாஸ்க் கிழிஞ்சுது...! திமுக மீது அருண்ராஜ் அட்டாக்..!!
திமுகவின் சமூக நீதி முகமூடி கிழிந்து விட்டதாக தவெக அருண்ராஜ் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறையின் மூலம் திமுக அரசின் சமூக நீதி முகமூடி கிழிந்ததாக தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைப் பரப்புக் குழு செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும், மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரியும் கடந்த ஐந்து நாட்களாக அறவழியில் போராடி வரும் மாற்றுத்திறனாளிகள் மீது தமிழக காவல்துறை ஏவியுள்ள வன்முறை மற்றும் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று கூறினார்.
கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கானோரை ராஜரத்தினம் மைதானத்தில் சிறைபிடித்து வைத்தது மட்டுமன்றி, அவர்களுக்குத் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்வதாகப் பொய் கூறி, நள்ளிரவில் வெவ்வேறு திசைகளில் கொண்டு சென்று நடுத்தெருவில் இறக்கிவிட்டிருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்றார்.
சமூக நீதி மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றம் பற்றி மேடைதோறும் பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், மாற்றுத்திறனாளிகள் இவ்வளவு கொடூரமான முறையில் நடத்தப்படுவது ஒரு கரும்புள்ளி என சாடியுள்ளார். காவல்துறையினர் மாற்றுத்திறனாளிப் பெண்களை ஒருமையில் பேசியும், குண்டுக்கட்டாகத் தூக்கிப் பேருந்துகளில் ஏற்றியதும் எவ்வகையிலும் ஏற்க முடியாத அநாகரிகமான செயல் என்றும் மகளிர் உதவித்தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கும் இந்த அரசு, 1500 ரூபாய் உயர்வு கேட்கும் மாற்றுத்திறனாளிகளுக்குக் குடிநீர் கூட வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடுத்த பட்ஜெட்டை TVK தாக்கல் செய்யும்... இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்... அருண்ராஜ் விளாசல்..!
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் முக்கியத் தலைவரின் மனைவி காவல்துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு, மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் சொந்தக் கூட்டணிப் பிரதிநிதிகளுக்கே இந்த நிலை என்றால், சாதாரண எளிய மக்களின் குரலுக்கு இந்த ஆட்சியில் என்ன மதிப்பு இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
தலைமைச் செயலாளர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு வராதது அரசின் மெத்தனப் போக்கையே வெளிப்படுத்துகிறது என்று கூறிய அவர், தமிழக அரசு அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதுடன், நள்ளிரவில் அவர்களுக்கு நேர்ந்த அவலங்களுக்குப் பகிரங்கமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...!