மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!
அரசின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் வெறும் அறிக்கையாக முடிந்துவிட்டது இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் வெறும் கண்துடைப்பு அறிக்கைகளாகவே முடிந்துவிட்டன என்றும், இதனால் தமிழக மக்களுக்கு எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை என்றும் தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் மிகக் காட்டமாகக் குற்றம்சாட்டியுள்ளார். விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீவிர கள ஆய்வு மேற்கொண்ட அவர், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் 'வெற்றி பயணம்' திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே போக்குவரத்துத் துறையும் மின்சாரத் துறையும் பல லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளித்து வரும் வேளையில், எதற்கெடுத்தாலும் அனைத்தையும் இலவசம், இலவசம் என அரசு கண்மூடித்தனமாக அறிவித்து வருகிறது.
எந்தவொரு மக்கள் நலத் திட்டத்தை அறிவிப்பதற்கு முன்பும், அந்தத் திட்டம் பொதுமக்களிடம் முறையாகச் சென்றடைகிறதா, மக்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாகப் பயனடைகிறார்களா என்பதை அரசு களத்தில் ஆய்வு செய்ய வேண்டும்; பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படாத வகையில் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்துப் பேசிய அவர், 15 நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஒவ்வொரு நாளும் துறைசார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிப் பிரச்சினைகளைப் பேசினாலும், அதற்கு முதலமைச்சர் உரிய முறையில் பதிலளிக்கவில்லை.
சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையில் மிக அதிகமாகப் பேசியது நான்தான்; ஆனால் இதுவரை நான் முன்வைத்த எந்தவொரு மக்கள் கோரிக்கைக்கும் அரசிடம் இருந்து முறையான பதில் வரவில்லை. ஒட்டுமொத்தமாக அரசின் மானியக் கோரிக்கை விவாதங்கள் அனைத்தும் வெற்று அறிக்கைகளாகவே முடிந்துவிட்டன; இதனால் மக்களுக்கு எவ்விதப் பலனும் கிடைக்கவில்லை என்று சாடினார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் களம் குறித்துக் குறிப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பிரச்சாரக் களத்தில் பொதுமக்கள் எங்களுக்கு அமோக வரவேற்பளித்தனர்; இருப்பினும் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதால், ஜனநாயக முறைப்படி மக்கள் அளிக்கும் தீர்ப்பை நாம் அனைவரும் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்துப் பேசிய அவர், டெங்கு காய்ச்சலால் மாநிலத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர்; பருவநிலை மாற்றத்தால் அவ்வப்போது சில வகையான காய்ச்சல்கள் ஏற்படுவது இயல்பானது என்றாலும், அரசு தற்போது தீவிரமாகக் களமிறங்கி அதனைக் கட்டுப்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இறுதியாக விருத்தாசலம் தொகுதி பிரச்சினைகளை முன்வைத்த அவர், விருத்தாசலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். மேலும், விருத்தாசலத்தில் குடியிருப்புகள் மற்றும் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை நான் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தேன்.
அப்பகுதிகளில் உள்ள கடைகளை அகற்றக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை பேசியபோது சில நாட்கள் கால அவகாசம் கேட்டனர். ஆனால் 5 மாதங்கள் கடந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் மிகை மாநிலம் மின் தட்டுப்பாடு மாநிலமாகிவிட்டது! தவெக அரசை விளாசிய தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்!