சட்டமன்றத் தேர்தல்: பணப் பட்டுவாடாவுக்கு முற்றுப்புள்ளி! கண்காணிப்பை தொடங்கிய வருமான வரித்துறை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை கட்டுப்படுத்த கண்காணிப்பு பணியைத் தொடங்கி விட்டதாகத் தமிழ்நாடு புதுச்சேரி வருமான வரித்துறை புலனாய்வு இயக்குனர் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதைக் கட்டுப்படுத்தவும், முறைகேடான பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும் வருமான வரித் துறை தனது தீவிரப் புலனாய்வுப் பணிகளைத் தொடங்கி விட்டதாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் பிரதாப் சிங் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 30 வருமான வரித் துறை ஆய்வாளர்களைப் பயன்படுத்தித் தீவிரமாகக் கண்காணிக்கத் துவங்கப்பட்டுள்ளது. இந்த 30 ஆய்வாளர்களும் ஒரு கூடுதல் இயக்குநர் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு, தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பணப் பட்டுவாடாவைத் தீவிரமாகக் கண்காணிக்கின்றனர்.
கண்காணிப்புக் குழு ஒவ்வொரு வாரமும் அறிக்கையைச் சமர்ப்பித்து வருவதாகவும் பிரதாப் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகள் தமிழகத்துக்கு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். பணப் பட்டுவாடா மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வருமான வரித்துறை, மத்திய மற்றும் மாநில விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இதையும் படிங்க: சட்டமன்ற தேர்தல் 2026: விஜய் முதல்வர் வேட்பாளராக இருந்தால் மட்டுமே கூட்டணி – நிர்மல் குமார் திட்டவட்டம்!
"வருமான வரித்துறை, மத்திய விசாரணை அமைப்புகளுடனும் தமிழகக் போலீசாருடனும் இணைந்து இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகிறோம். குறிப்பாக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை, மத்திய உளவுத்துறை, ஜி.எஸ்.டி. உளவுத்துறை ஆகிய அமைப்புகளுடன் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்தித்து ஆலோசனை நடத்துகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
வருமான வரித் துறையின் இந்தக் கடுமையான நடவடிக்கைகள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் புழக்கத்தைக் கணிசமாகக் குறைத்து, நேர்மையான தேர்தலை நடத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு! டிச. 29-ல் புதுச்சேரி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: முக்கிய அறிவிப்பு வெளியீடு!