கருணாநிதி காரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய ராமச்சந்திரன்... தாராசுரத்தில் பரபரப்பு...!
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அண்ணன் தம்பி இடையே சொத்தில் பாகம் பிரிப்பதில் தகராறு.
சொத்து தகராறில் தம்பி வீட்டில் இருந்த காரினை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய அண்ணன் மற்றும் அவரது மனைவிகள் மகன் உள்ளிட்ட எட்டு பேர் கைது .
கும்பகோணம் அருகே தாராசுரம் மிஷின் தெருவை சேர்ந்த கருணாநிதி 34 வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இவரது அண்ணன் ராமச்சந்திரனுக்கும் இவருக்கும் சொத்து பாகம் பிரிப்பதில் தகராறு நீண்ட நாட்களாகவே நிலுவையில் இருந்து வருகிறது .
இந்நிலையில் இன்று மாலை ராமச்சந்திரன் 15-க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்துக் கொண்டு தம்பி கருணாநிதி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் கொண்டு வந்த அரிவாளால் கருணாநிதியை தாக்க முயன்றனர் .
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை பணிகள்..! அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!
இதில் தப்பிய கருணாநிதி வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார். வெளியில் அவரது காரினை அவரது அண்ணன் ராமச்சந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர் . கார் முழுவதும் பற்றி எரியத்துவங்கியதும், ராமச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பிச் சென்றனர்.
கார்,வேன், மற்றும் இருசக்கர வாகனங்களில் இவர்கள் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து கருணாநிதி, கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் தம்பி கருணாநிதிக்கும் அண்ணன் ராமச்சந்திரனுக்கும் இடையே சொத்து பங்கு பிரிப்பதில் நீண்ட நாட்களாகவே தகராறு இருப்பது தெரிய வந்தது.
சுமார் 800 சதுர அடி உள்ள வீட்டினை யார் எடுத்துக் கொள்வது என்ற தகராறு நீண்ட நாட்களாகவே உள்ளது . அந்த வீட்டினை அபகரிப்பதற்காகவே இன்று ராமச்சந்திரன் அவர்கள் கூட்டாளிகள் வந்ததாக தெரிகிறது. பெட்ரோல் ஊற்றி காரைக் கொளுத்தியதும் கார் பெரிய அளவில் எரியத் துவங்கியது. இதனைக் கண்ட ராமச்சந்திரன் உள்ளிட்ட வந்த நபர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
மேலும் காவல்துறையினர் கருணாநிதியின் அண்ணன் ராமச்சந்திரன் அவரது இரண்டு மனைவிகள், ஒரு மகன் மற்றும் ராமச்சந்திரனின் சகோதரி உள்ளிட்ட 8 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் தம்பி இடையே சொத்து பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு, தம்பியின் காரை கொளுத்திய சம்பவம் தாராசுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .
ஒரு சாரார் ராமச்சந்திரன் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதனால் கார் எரிந்ததாகவும் கூறுகின்றனர். இது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: இனிமே இப்படி செய்யமாட்டேன்..! பைக் சாகசம் செய்த இளைஞருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த போலீஸ்..!