பெண்களைப் பற்றி பேசினால் சும்மா இருக்க மாட்டேன்! ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் ஆவேச பதிலடி!
பெண்களைப் பற்றிப் பேசினால் சும்மா இருக்க மாட்டேன் என்றும், சத்யபாமா பற்றி ஸ்டாலின் பேசியதைக் காதுகொடுத்துக் கேட்க முடியாது என்றும் முதல்வர் விஜய் தாராபுரத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நமது சகோதரி சத்யபாமா குறித்துப் பேசிவிட்டுச் சென்றதை எவராலும் காதுகொடுத்துக் கேட்க முடியாது என்றும், என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்றும் தாராபுரம் தொகுதி தேர்தல் பிரச்சாரக் களத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மிக ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைய உள்ள நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று தாராபுரம் தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது தவெக வேட்பாளர் குறித்து முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய், ஸ்டாலின் சார் இங்கு வந்து என்ன பேசிவிட்டுப் போயிருக்கிறார் என்பது ஒட்டுமொத்த தொகுதி மக்களுக்கும் நன்றாகத் தெரியும்; நமது சகோதரி சத்யபாமாவைப் பற்றி அவர் பேசிய பேச்சை எவராலும் காதுகொடுத்துக் கேட்க முடியாது; அதை மறக்கிற மாதிரியா அவர் பேசிவிட்டுப் போயிருக்கிறார்? என்று கொதித்தார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் என்ட்ரி! ஒன் லாஸ்ட் பிரசாரம்!! தாராபுரத்தில் ரோடு ஷோவை துவங்கினார் முதலமைச்சர் விஜய்!
தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளுங்கள்; அத்தனை விமர்சனங்களையும், அவதூறுகளையும் நான் தாங்கிக் கொள்கிறேன்; ஆனால், நமது சகோதரி பற்றியோ அல்லது தமிழ்நாட்டு தாய்மார்கள், அக்கா, தங்கை உள்ளிட்ட பெண்களைப் பற்றியோ கொச்சையாகப் பேசினால் இந்த விஜய் ஒருபோதும் சும்மா இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கும் தொனியில் பேசினார்.
எதிர்க்கட்சிகள் தனது களப் பயணத்தை விமர்சிப்பது குறித்துப் பேசிய முதல்வர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைத் தேடிப் போகும் சந்தர்ப்பவாத ஆள் நான் கிடையாது; இவர்கள் அனைவரும் எனது ரத்த சொந்தங்கள்; என் சொந்தங்களை நான் எப்போது வேண்டுமானாலும் பார்ப்பேன், எத்தனை முறை வேண்டுமானாலும் நேரில் போய்ப் பார்ப்பேன்; அதைப்பற்றிக் கேள்வி கேட்க உங்களுக்கென்ன உரிமை இருக்கிறது? என்று எதிர்தரப்பினரை நோக்கிக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, தாராபுரம் வீதிகளில் வாகனப் பேரணியாகச் சென்ற முதலமைச்சர் விஜய்யை வரவேற்க வழிநெடுகிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது தவெக தொண்டர் ஒருவர் கையில் கரும்புடன் முதலமைச்சரைப் பார்க்க முயன்றதைக் கவனித்த விஜய், உடனடியாகத் தனது பிரச்சார வாகனத்தை நிறுத்தச் சொல்லி, அந்தத் தொண்டரை அருகில் அழைத்து அன்புடன் கரும்பைப் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.
அதனையடுத்து, வழியில் பொதுமக்களுடன் மக்களாக இணைந்து சிறிது தூரம் பாரம்பரிய மாட்டு வண்டியில் ஏறிப் பயணித்து முதல்வர் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்களுக்கு எதிரான அவதூறுகளுக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த அனல் பறக்கும் பதிலடியும், கிராமத்து பாணியில் மாட்டு வண்டியில் பயணித்த எளிமையும் தாராபுரம் தேர்தல் களத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!