குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!
உளுந்தூர்பேட்டையில் குடிபோதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்று தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மதுபோதையில் ஆட்டோவை ஓட்டிச் சென்று சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதியதில், 10-ஆம் வகுப்புப் பள்ளி மாணவர் மற்றும் அவரது தாய் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து 7 பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சின்னக்குப்பம் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இக் வாகனத்தைச் செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் (47) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு ஓட்டல் எதிரே ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புக் கட்டையில் (Center Median) பலமாக மோதி கவிழ்ந்தது. இக்கொடூர விபத்தில் ஆட்டோவில் பயணித்த சின்னக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்புப் படிக்கும் தனியார் பள்ளி மாணவர் தர்ஷன் (15), அவரது தாய் ராதா (39) உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: ஜந்தர் மந்தர் சீசன் 2 விரைவில்! CJP தலைவர் அபிஜித் தீப்கே அறிவிப்பு!
சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலையப் போலீசார், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த மாணவர் தர்ஷன் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் ஆனந்தவேல் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு போதையில் வாகனத்தை ஓட்டியதே இக் விபத்திற்குக் காரணம் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் பால் நிறுத்தம்! தமிழக அரசுக்கு ஆவின் சங்கம் எச்சரிக்கை!