×
 

22 காளைகள்.. ஒரு பாலமுருகன்! அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்து காரை தட்டி சென்ற ஒற்றைச் சிங்கம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் முதலிடம் பிடித்த பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை ஒற்றை ஆளாக அடக்கி, முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகன், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை தட்டிச் சென்றார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கினர். விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில், அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத சிறந்த காளைகளின் விவரங்களை விழா குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த வீரப் போரில் காயங்களையும் பொருட்படுத்தாது காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள் மதுரையின் வீரத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்தனர்.

இன்று நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 937 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. களத்தில் புழுதி பறக்க நடைபெற்ற இந்த வீர விளையாட்டில், வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளைத் திமிலைப் பிடித்து அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து 17 காளைகளை அடக்கிய கார்த்தி இரண்டாம் இடத்தையும், 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கும் பைக் மற்றும் தங்கக் காசுகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதேசமயம், இன்று நடைபெற்ற போட்டியில் காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 57 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மைதானத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது. பிடிபடாத சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் முதலமைச்சர் சார்பில் டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!

இதையும் படிங்க: சீறிப்பாயும் காளைகள்..!! அடக்கும் வீரர்கள்..!! அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகல தொடக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share