×
 

டிஜிட்டல் மயமாகும் வாடிவாசல்! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்முறை LED ஸ்கோர்போர்டு அறிமுகம்!

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் புதிய புரட்சியாக, மதுரை அவனியாபுரத்தில் இன்று வரலாற்றிலேயே முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று காலை (ஜனவரி 15) கோலாகலமாகத் தொடங்கியது. வீர விளையாட்டான இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான காளைகளும், வீரர்களும் பங்கேற்று, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர். இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி, பாரம்பரிய இசை மற்றும் வழிபாட்டுடன் ஆரம்பமானது. ஜல்லிக்கட்டை பச்சை கொடியை அசைத்து அவனியாபுரம் ஜல்லிகட்டு நிகழ்ச்சியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளையும், அவற்றைத் தழுவத் துடிக்கும் வீரர்களையும் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ள நிலையில், போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் இந்த ஆண்டு பல்வேறு நவீன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் புள்ளிகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதி முதன்முறையாகப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இந்த ஆண்டு முதல்முறையாக டிஜிட்டல் (எல்.இ.டி.) ஸ்கோர் போர்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வீரர் முன்னிலையில் இருக்கிறார், எந்தக் காளை பிடிபடாமல் சென்றது போன்ற விபரங்கள் உடனுக்குடன் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இது வீரர்களிடையே கடும் போட்டியை உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டு சிறந்தக் காளைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் விலையுயர்ந்த டிராக்டரும், சிறப்பாகக் காளைகளை அடக்கும் சிறந்த வீரருக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: சீறிப்பாயும் காளைகள்..!! அடக்கும் வீரர்கள்..!! அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகல தொடக்கம்..!!

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதால், போட்டி மிக நேர்த்தியாக நடைபெற்று வருகிறது. அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை (ஜனவரி 16) பாலமேட்டிலும், நாளை மறுநாள் (ஜனவரி 17) அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போதைய நிலவரப்படி, பல ஜாம்பவான் காளைகளை வீரர்கள் அடக்கி வரும் நிலையில், காரை வெல்லப்போகும் அந்த ‘சிங்கம்’ யார் என்பதை அறிய ஒட்டுமொத்த மதுரையே ஆவலுடன் காத்திருக்கிறது.


 

இதையும் படிங்க: வாடிவாசல் ரெடி! அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகள்.. 2,200 போலீசார் குவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share