73-வது பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலின்! பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து!
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டுச் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குத் தொலைபேசி வாயிலாகப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்றத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சமீபத்தில் திமுக-வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், "2026 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சமத்துவம், வளர்ச்சி, மனிதநேயம் ஆகிய அடிப்படைகளில் மக்கள் நல ஆட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும்" எனத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹப்பாடா... ஒரு வழியா வந்தாச்சு... பூந்தமல்லி - வடபழனி மெட்ரோவுக்கு அனுமதி..!!
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, "முதல்வர் மு.க. ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்குச் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்" என வாழ்த்துச் செய்தி விடுத்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சூழும் பகையை வீழ்த்தி, பாசிச இருளகற்றும் உதயசூரியனாய், திராவிட மாடல் 2.0 அரசை அமைப்பதே அவருக்கு நாம் அளிக்கும் பிறந்தநாள் பரிசு" எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துத் தனது தந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
திரையுலகின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த், முதலமைச்சரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கானத் தொண்டர்கள், "நாளைய தீர்ப்பு" என 2026 தேர்தலைக் குறிப்பிட்டு உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!