பெஸ்ட் புதுச்சேரி கனவு நனவாகிறது.....₹2,700 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்தபோது, மாநிலத்தின் வளர்ச்சிக்காக 'BEST' என்ற மந்திரத்தை வழங்கியதாக பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு, சுமார் ₹2,700 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், புதுச்சேரியின் வளர்ச்சி குறித்து மிகுந்த நெகிழ்ச்சியுடன் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்தபோது, 'பெஸ்ட்' புதுச்சேரி என்ற மந்திரத்தை வழங்கினேன். Business (வணிகம்), Education (கல்வி), Spirituality (ஆன்மீகம்) மற்றும் Tourism (சுற்றுலா) ஆகிய நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்ட அந்தத் தொலைநோக்கு பார்வை, கடந்த நான்கரை ஆண்டுகளில் நனவாகி வருவதை இன்று என்னால் காண முடிகிறது என பிரதமர் பெருமையாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசும் புதுச்சேரி அரசும் ஒரே குறிக்கோளுடன் செயல்படுவதால், தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளதாகவும், கடலோரப் பகுதி வளர்ச்சிக் குறியீட்டில் புதுச்சேரி நாட்டின் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். 750 ஏக்கர் பரப்பளவிலான காரசூர்-சேதராப்பட்டு தொழிற்பேட்டை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதில் பார்மா பார்க், டெக்ஸ்டைல் பார்க் மற்றும் ஐடி பார்க் ஆகியவை அமைய உள்ளன.
இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!
PM e-Bus Seva திட்டத்தின் கீழ் புதிய மின்சாரப் பேருந்துகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன. 2047-க்குள் 'வளர்ந்த புதுச்சேரி, வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை அடையத் தொடர்ந்து உழைப்போம் எனப் பிரதமர் சூளுரைத்தார்.
முன்னதாக, மகாகவி பாரதியார் மற்றும் ஸ்ரீ அரவிந்தர் போன்ற புரட்சியாளர்கள் உலாவிய இந்த மண்ணிற்கு வருவது தனக்குப் பெருமை அளிப்பதாக அவர் தெரிவித்தார். புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் இன்று மாலை மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்ல உள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் மறைவு..!! பிரதமர் மோடி இரங்கல்..!!