தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை.. மசோதாவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர்!!
ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் இந்த வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தது.
தமிழ்நாடு அரசுப் பணிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், நேரடி பணி நியமனங்கள் மூலம் நிரப்பப்படும் அனைத்து காலியிடங்களிலும் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் ஏற்பாடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி நியமனம் செய்யும் சட்டம்’ இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி, அரசுப் பணியில் ஏற்கனவே உள்ளவரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே அரசுப் பணியில் உள்ளவர்கள் இந்த வகைப்பாட்டின் கீழ் முன்னுரிமைக்குத் தகுதியற்றவர்கள் எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, சட்டத்தின் நோக்கத்தைத் தெளிவுப்படுத்தவும், 2010 செப்டம்பர் 7 முதல் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட நியமனங்களைச் செல்லுபடியாக்கவும், புதிய நியமனங்களுக்கு மட்டும் இந்த முன்னுரிமையைப் பயன்படுத்தவும் கடந்த ஜனவரி மாதம் சட்டசபையில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இப்போது ஆளுநர் ஒப்புதல் அளித்ததால், இந்த திருத்தச் சட்டம் புதிதாக நிரப்பப்படும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏற்கனவே முன்னுரிமை பெற்று பணியில் சேர்ந்தவர்கள் அதே சம்பள நிலையில் உள்ள பதவிகளுக்கு மீண்டும் இந்த முன்னுரிமையைக் கோர முடியாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளிகளுக்கு கருணை காட்ட கூடாது! டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஆளுநருக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை!
முன்னுரிமை பெறத் தகுதியுடையவர்கள்: முதல் வகுப்பு முதல் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை முழுவதுமாக தமிழ் வழியில் பயின்றவர்கள் மட்டுமே. பிற மொழிகளைப் பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் தகுதியற்றவர்கள். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 2 முதல் 8 வகுப்பு வரை நேரடியாகச் சேர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களும், பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து பின்னர் தமிழ்நாட்டில் தொடர்ந்தவர்களும் தகுதியுடையவர்கள்.
அனைத்து கல்வி நிலையங்களிலிருந்தும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிப்பதோடு, தமிழ்நாட்டின் இரண்டு மொழிக் கொள்கையுடன் இணைந்ததாகக் கருதப்படுகிறது. இனிமேல் புதிய நியமனங்களில் இந்த 20% ஒதுக்கீடு கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.
இதையும் படிங்க: போதையற்ற தமிழ்நாடு விழிப்புணர்வு பயணம்! ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தொடங்கி வைத்தார்!