×
 

கேரளா டூ தமிழ்நாடு நோ என்ட்ரி! பறவை காய்ச்சலால் எல்லையில் கெடுபிடி! பொது சுகாதாரத்துறை அதிரடி!

தமிழக - கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப் பொதுச் சுகாதாரத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாமக்கல் உள்ளிட்ட கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கால்நடை பராமரிப்புத் துறையினருடன் இணைந்து தீவிரமாகக் கண்காணிக்கவும், இறைச்சிக் கடைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் வாத்து மற்றும் கோழிகளுக்குப் பறவைக் காய்ச்சல் (Bird Flu) உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதன் தாக்கம் தமிழகத்திற்குள் பரவாமல் தடுக்கத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, கோவை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்துச் சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கேரளாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களின் சக்கரங்கள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதை உறுதி செய்யப் பொதுச் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால், கேரளாவிற்குச் சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் உடல் நலத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யாத்ரீகர்களுக்குக் காய்ச்சல், இருமல் அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாமக்கல் போன்ற கோழிப்பண்ணைகள் நிறைந்த மாவட்டங்களில் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் கூட்டுத் தணிக்கையில் ஈடுபட உள்ளனர். பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு உரியத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதோடு, இறப்பு விகிதம் அதிகரித்தால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும் பண்ணையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பக்தர்கள் உணர்வு முக்கியம்! கேரள கோயில்களில் பவுன்சர்கள் கூடாது: உயர் நீதிமன்றம் ஆவேசம்!

இறைச்சி விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையில், எக்காரணம் கொண்டும் உயிரிழந்த கோழிகளை வாங்கி விற்பனை செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைச்சிக் கடைகளில் தூய்மையைப் பராமரிக்கவும், அங்கீகரிக்கப்படாத இடங்களிலிருந்து பறவைகளைக் கொண்டு வருவதைத் தவிர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தை அச்சுறுத்தும் நாய் கடி: இந்த ஆண்டு மட்டும் 5.50 லட்சம் பேர் பாதிப்பு! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share