தமிழகத்தை அச்சுறுத்தும் நாய் கடி: இந்த ஆண்டு மட்டும் 5.50 லட்சம் பேர் பாதிப்பு!
தமிழகத்தில் இந்த ஆண்டு 5.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30,505 பாதிப்புகளுடன் சேலம் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தெருநாய்களின் தொல்லை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 5.50 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது சுகாதாரத் துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் நேற்று டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாகச் சேலம் மாவட்டத்தில் 30,505 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருச்சி (26,028), திருவள்ளூர் (25,711), மற்றும் செங்கல்பட்டு (24,906) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தலைநகர் சென்னையில் 14,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகச் சேலம், திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் நாய் கடியின் தாக்கம் மிகத் தீவிரமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய உள்ளாட்சி நிர்வாகங்களின் மெத்தனப் போக்கே இந்த எண்ணிக்கைப் உயர்விற்கு முக்கியக் காரணமாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து குழந்தைகளையும், முதியவர்களையும் தாக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை கிளப்பி வருகின்றன. குறிப்பாகக் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நாய் கடியினால் ஏற்படும் ரேபிஸ் ஆபத்தைக் குறைக்கத் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, தெருநாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி முகாம்களைப் போர்க்கால அடிப்படையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இதையும் படிங்க: வரைவு வாக்காளர் பட்டியல்... பெயர் சேர்க்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பம்... தேர்தல் ஆணையம் தகவல்...!
இதையும் படிங்க: ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!