×
 
☰

அதிமுக - பாமகவுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி? பாஜக மெகா ப்ளான்! சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் 2029 மக்களவைத் தேர்தலுக்குத் தயார்படுத்தவும் முழுநேரக் கட்சிப் பணியில் ஈடுபட விரும்புவதாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில், கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு மத்திய இணை அமைச்சர் பதவிகளை வழங்க பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தன.

சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் பங்கேற்றன. தற்போது அதிமுக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

இதையும் படிங்க: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக தவெக அரசு மீது பாஜக தேசிய தலைமை விமர்சனம்!

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன், சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தவும் 2029 மக்களவைத் தேர்தலுக்குத் தயார்படுத்தவும் முழுநேரக் கட்சிப் பணியில் ஈடுபட விரும்புவதாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த இடத்தைப் பெற தமிழக பாஜகத் தலைவர்களும் நிர்வாகிகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பலப்படுத்தும் எனவும், 2029 மக்களவைத் தேர்தலில் பயனளிக்கும் எனவும் பாஜக மேலிடம் கருதுவதாகக் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவினருக்கு ஆளுநர், துணை ஜனாதிபதி உள்ளிட்ட பதவிகளை அளித்தும் தேர்தல் அரசியலில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்ற பின்னணியில், நீண்டகால நட்புக் கட்சிகளான அதிமுக மற்றும் பாமகவுக்குத் தலா ஒரு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கையில், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடைமுறை தொடங்கிவிட்டது. எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்தவும், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்கவும் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்க மேலிடம் விரும்புகிறது. தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினருக்குப் பதிலாகக் கூட்டணிக் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்திலேயே இப்படியா? 4 சட்ட மேலவை இடங்களையும் கைப்பற்றிய பாஜக கூட்டணி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share