எத்தனை தொகுதி கேட்கலாம்? இன்று கூடுகிறது பாஜக உயர்மட்ட குழு கூட்டம்... முக்கிய ஆலோசனை...!
இன்று பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் கிண்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நடக்கவுள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் இந்த உயர்மட்டக் குழுக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். சமீபத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்தியத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான பிரசாரத் திட்டங்கள், தொகுதி வாரியான கட்சியின் நிலவர அறிக்கை, பலவீனமான பகுதிகளில் கட்சியை வலுப்படுத்துவதற்கான உத்திகள், சமூக வாக்குவங்கிகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் நடவடிக்கைகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு தொடர்பான திட்டமிடல்கள் ஆகியவையும் ஆய்வுக்கு வரலாம்.
இதையும் படிங்க: களைக்கட்ட போகுது. ! ஈரோட்டில் விஜய்... தவெக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!
தமிழக அரசியல் வட்டாரங்களில் இந்தக் கூட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பாஜகவின் மாநில அளவிலான இத்தகைய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள், வரும் தேர்தலில் கட்சியின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முக்கியமான அடியாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் முடிவுகள் அடுத்தடுத்த நாட்களில் கட்சியின் உத்திகளில் பிரதிபலிக்கும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!