கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விசாரிக்க சென்ற பாஜக எம்.பிக்கள் குழு.. விபத்தில் சிக்கிய கார்கள்..!!
கோவையில் இருந்து கரூர் சென்ற பாஜக எம்.பி ஹேமா மாலினினி கார் விபத்தில் சிக்கியது.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் தமிழ் வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) வேலுச்சாமிபுரத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றியதன் பிறகு, ஆதரவாளர்கள் அவரை அணுக முயன்றபோது திடீர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் சிக்கிக் கொண்டனர்.
முதலில் 39 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை பலி எண்ணிக்கை 41ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 பேர் என அவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 25 பேர் 2-3 நிமிடங்கள் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர். இது கூட்ட அளவு மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் தடயவியல் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: தம்பிங்களா... படிச்சு படிச்சு சொன்னோமே டா… கதறி அழுத அன்பில் மகேஷ்…!
இச்சம்பவத்தால் தவெக கட்சி நடுக்கமடைந்துள்ளது. தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில், "இது என் வாழ்நாளில் மறக்க முடியாத துயரம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்" என இரங்கல் தெரிவித்தார். மேலும் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியான இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.பி.க்கள் குழு அமைத்து கரூரை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் அணுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஶ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் எம்.பி ஹேமா மாலினி தலைமையிலான குழு இன்று கோவை வந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கரூர் சம்பவம் குறித்து 8 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு அறிக்கை அளிக்க இருப்பதாக அவர்கள் கூறினர்.
இதையடுத்து அவர்கள் கோவையில் இருந்து கரூர் புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, சூலூர் அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் ஹேமமாலினி காரும், பாஜக எம்.பிக்கள் பயணித்த மற்றொரு காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எம்.பிக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கார்களுக்கு மட்டுமே லேசான சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறிது நேரத்தில் அவர்கள் அதே கார்களில் கரூர் நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்... உதவி எண்கள் அறிவிப்பு..!!