ஆவின் பாலில் மருந்து வாடை..! மக்கள் உடல் நலனோடு விளையாடுவதா..? நயினார் ஆவேசம்..!!
ஆவின் நிர்வாகம் மக்கள் உடல் நலனோடு விளையாடுவதாக நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்தார்.
மக்களின் உடல்நலனுடன் ஆவின் நிர்வாகம் விளையாடுவதாகவும் முறைகேடுகளைக் கண்டறிய உயர்மட்டக் குழு அமைத்திட வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாகப் பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றார்.
ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் போன்ற ரசாயனங்களைக் கலந்து கலப்படம் செய்வதாகப் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை குறிப்பிட்டார்.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயனக் கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளைத் தட்டிக்கேட்பவர்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் படம்பிடித்துக் காட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், முறையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஏதுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலைக் கொள்முதல் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!
எனவே, பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இனி SHORTAGE இருக்கக் கூடாது... ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்கணும்... முதல்வர் விஜய் அறிவுறுத்தல்..!!