100 நாள் சாதனை இல்ல... வேதனை..!! தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை இல்லை.. வேதனை என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சியின் 100 நாட்களில் தொடரும் குற்றச் சம்பவங்கள் குறித்து பாஜக முன்னாள் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், மக்கள் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள அரிவாள் கலாச்சாரம் மாநிலத்தின் பாதுகாப்பு சூழலை கேள்விக்குறியாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் மட்டும் காஞ்சிபுரத்தில் இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆட்டோவில் பயணம் செய்த பெண் கொல்லப்பட்ட சம்பவம், கோவையில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை அடுத்தடுத்து அரங்கேறியுள்ளன.
இத்தகைய கொலைச் சம்பவங்கள் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கியுள்ளன. இவை தனித்தனியான நிகழ்வுகள் அல்ல, மாறாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முறையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவின் வெளிப்பாடுகளாகும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இது ஆட்சியின் சட்டம் ஒழுங்கு மீதான அக்கறையை கேள்விக்குறியாக்குகிறது. இதை 100 நாள் சாதனை என்று சொல்ல முடியாது. இது 100 நாள் வேதனை என்றுதான் சொல்ல வேண்டும். அமைதி பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில் இன்று ஆயுதங்கள் சர்வசாதாரணமாக புழங்குவதும், கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறுவதும் மிகவும் வருத்தம் அளிக்கும் நிலையாகும்.
இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடல் அவமதிப்பு?! சோனியா காந்தி மீது போலீசில் புகார்! 3 ஆண்டு சிறை வரை தண்டனை?
இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் பாதுகாப்பு உணர்வில் பாதிப்பை உணர்கிறார்கள். குடும்பங்கள் அச்சத்தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரியது.அரிவாள் கலாச்சாரம் மீண்டும் தலைதூக்கி வருவது மாநிலத்தின் சமூக நல்லிணக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்து வருவதாகவும், மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளதாகவும் வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: வாஜ்பாய் நினைவு தினம்! ஒரே இடத்தில் திரண்ட தலைவர்கள்! பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு மலரஞ்சலி!