NDA கூட்டணிக்கு போவாருன்னு தெரியும்.. வெட்டத்தான் ஆடு வாங்குறாங்க! தினகரனை விமர்சித்த ஆதவ் அர்ஜூனா.. !
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, டிடிவி தினகரனின் அரசியல் நகர்வுகள் மற்றும் திமுக - பாஜக இடையிலான ரகசிய உறவு குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் குழு ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலின் தற்போதைய நிலவரத்தைத் தனது பாணியில் ‘விவரித்தார்’. டிடிவி தினகரன் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது குறித்துக் கேட்டபோது, "அவர் அங்குச் செல்வது எதிர்பார்த்த ஒன்றுதான். எல்லா ஆடுகளும் வாங்கப்படுவது கடைசியில் வெட்டப்படுவதற்காகத்தான்" என மிகக் காட்டமாகத் தெரிவித்தார்.
தற்போதைய கூட்டணிகள் குறித்துப் பேசிய அவர், "இப்போது உருவாகும் கூட்டணிகளில் உடல் இருக்கிறது, ஆனால் முகம் இல்லை. முகமும் மூளையும் இல்லாத எந்த உடலும் கோமா நிலைதான். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டன. ஆனால், எங்கள் தலைவர் விஜய் மக்களின் நம்பிக்கையாக உருவெடுத்துள்ளார். திமுக மாவட்டச் செயலாளர்களின் வீடுகளிலேயே அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர். எங்கள் கட்சியில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாக்கு வங்கி 80 சதவீதத்தைத் தாண்டிச் செல்கிறது" எனத் தன்னம்பிக்கையுடன் கூறினார்.
பாஜக - திமுக உறவு குறித்துப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த ஆதவ் அர்ஜுனா, "திமுகவினர் பாஜகவைத் தங்களின் மிகப்பெரிய எதிரி என்பார்கள். ஆனால், துணை முதலமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி நடித்த படம் பொங்கல் அன்று வெளியாகிறது. அதில் நடித்தவர்கள் டெல்லியில் பொங்கல் கொண்டாடுகிறார்கள். ஆனால், எங்கள் தலைவர் படம் வெளியாகாமல் முடக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனச் சாடினார். மேலும், கரூர் சிபிஐ வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும், தலைவர் விஜய் அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சிக்கான தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார். ஈரோட்டில் நடைபெற்றதைப் போலவே தமிழகம் முழுவதும் விஜய்யின் பிரசாரப் பயணம் விரைவில் தொடங்கும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் புதிய திருப்பம்..!! தவெகவிற்கு பொதுச்சின்னம் கிடைக்குமா..?? டெல்லியிலிருந்து வந்த புதிய தகவல்..!!
இதையும் படிங்க: த.வெ.க. தேர்தல் பிரசாரக்குழு நாளை ஆலோசனை: 234 தொகுதிகளுக்கும் விஜய் புதிய வியூகம்!