×
 

சட்டமன்றத்தில் அந்த வார்த்தையை தவிர்த்திடுங்க! சபாநாயகருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை!

சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் முதல் உரையை 'கன்னிப் பேச்சு' என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக வெற்றிபெற்றுப் பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது முதல் உரையை கன்னிப் பேச்சு என்று குறிப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, ‘அறிமுகப் பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று அழைக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருவதை விவரித்துள்ளார். தற்போதைய சட்டமன்றத்தில் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் பலர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்கள் உரையாற்றத் தொடங்கும் போது எனது கன்னிப் பேச்சைத் தொடங்குகிறேன் எனக் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, இன்றைய பேரவை நிகழ்வில் திருவள்ளூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் டாக்டர் அருண்குமார் பேசும்போதும் அவ்வாறே குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கன்னி என்ற சொல் இளம் வயதுப் பெண்ணைக் குறிக்கும் சொல்லாகவும், கற்பு ஒழுக்கத்தின் அடிப்படையிலும் பயன்படுத்தப்பட்டு வருவதை விளக்கியுள்ள அவர், கடந்த 2021-ல் தாம் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி முதல்முறையாகப் பேசிய போதே இதற்கு மாற்று ஆலோசனையை முன்வைத்ததை நினைவுகூர்ந்துள்ளார். அப்போது அவையில் பேசிய தான், இளம் பெண்ணைக் குறிக்கும் சொல்லான 'கன்னிப் பேச்சு' என்பதற்குப் பதிலாக, ‘அறிமுகப் பேச்சு’ அல்லது ‘முதல் பேச்சு’ என்று குறிப்பிடுவதே கண்ணியமாகவும் நாகரிகமாகவும் இருக்கும் எனக் கேட்டுக்கொண்டதாகவும், அன்றைய சபாநாயகர் அப்பாவு அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவில் அதிரடி மாற்றம்... தேசிய மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு..!!

எனினும், தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக ஆட்சியின் சட்டமன்ற நடவடிக்கைகளிலும் உறுப்பினர்கள் தொடர்ந்து ‘கன்னிப் பேச்சு’ என்றே குறிப்பிடுவது வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். எனவே, தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டு, சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் ‘கன்னிப் பேச்சு’ எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகரிகமான சொற்களைப் பயன்படுத்தி உரையாற்ற வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: 100 நாள் சாதனை இல்ல... வேதனை..!! தவெக அரசை விளாசிய வானதி சீனிவாசன்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share