×
 

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நேரில் சென்ற தமிழிசை.. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்த தமிழிசை சௌந்தரராஜன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள், ராயபுரம் (மண்டலம் 5) மற்றும் திரு.வி.க நகர் (மண்டலம் 6) ஆகிய பகுதிகளில் குப்பை சேகரிப்பு தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரிப்பன் கட்டடத்தின் முன்பு 13 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இப்போராட்டத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NULM) கீழ் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள், பங்கேற்றனர். 

இவர்களின் முக்கிய கோரிக்கைகள், தனியார் மயமாக்கலை ரத்து செய்வது, பணி நிரந்தரமாக்கல், மாத ஊதியமாக ரூ.23,000 தொடர்ந்து வழங்குதல் மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை ஆகும். தனியார்மயமாக்கல் காரணமாக ஊதியம் ரூ.16,000 ஆகக் குறைக்கப்படலாம் என்ற அச்சமும் இவர்களிடையே நிலவுகிறது.

இதையும் படிங்க: தொடர் போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள்.. இன்று நடந்த பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி..!!

பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்றம், பொது இடையூறு காரணமாக போராட்டத்தை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, அதே நாள் நள்ளிரவு காவல்துறையினர் சுமார் 600 போராட்டக்காரர்களை கைது செய்து, பல்வேறு திருமண மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர். இந்நடவடிக்கையை மனித உரிமை மீறல் என இடது தொழிற்சங்க மையம் (LTUC) கண்டித்தது. 

இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், நேற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட முயன்றார். ஆனால், காவல்துறையினர் அவரை வீட்டிலேயே தடுத்து நிறுத்தினர். 

இதனையடுத்து அன்றைய தினமே, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை ஆதரிக்க தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்றார். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும், அவரை வீட்டுக்காவலில் வைக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்தார். “பணியாளர்களின் துயரங்களுக்கு செவிமடுக்காத திமுக அரசு, ஆதரவளிப்பவர்களைத் தடுப்பது ஜனநாயக விரோதமானது” என அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: இனி பளபளன்னு மாறப்போகுது மெரினா பீச்.. களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share