23-ஆம் புலிகேசியை போல் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உற்சாகம்: முதல்வர் விஜயை விளாசிய இபிஎஸ்!
காவிரி தொழில்நுட்பக் குழுவின் அருமை தெரியாமல் முடக்கி வைத்துள்ள தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் உரிமையையும் தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி நீரையும் காக்கத் துப்பில்லாமல், பல ஆண்டுகளாக இயங்கி வந்த 'காவிரி தொழில்நுட்பக் குழுவை' கடந்த 4 மாதங்களாகச் செயல்பட விடாமல் முடக்கி வைத்துள்ள ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொய்க்கால் குதிரை அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தலைமைக் கழக அறிக்கையில், விளையாட்டுப் பிள்ளைகளின் கையில் சிக்கிய பொம்மை போலத் திறமையற்ற தவெக அரசின் கைகளில் தமிழ்நாடு சிக்கித் தவிப்பதாகச் சாடியுள்ளார். கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு உரிய சட்ட மற்றும் அரசியல் அழுத்தங்களைக் கொடுத்துத் தமிழகத்திற்குரிய பங்கு நீரைப் பெறத் துப்பில்லாமலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் கொக்கரிப்பதை அடக்க வழி தெரியாமலும் முதலமைச்சர் விஜய் திணறி வருவதாகக் குற்றம்சாட்டினார்.
தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயான காவிரி நீர் தாவாவில் தமிழகத்தின் வாதங்களை வலுவாக எடுத்துரைத்து வந்த காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் செல்வராஜ் கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை 4 மாதங்கள் கழித்து அக்டோபர் 9 அன்றுதான் அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இதுவரை அப்பதவிக்கு யாரையும் நியமிக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கும்பகர்ணனைக் கூட எழுப்பி விடலாம், ஆனால் இந்த அரசைத் தட்டி எழுப்புவது குதிரைக் கொம்பாக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: பெருமைமிகு வரலாறு..! அதிமுக 55 ஆம் ஆண்டு விழா..!! EPS உற்சாகம்.!
தொழில்நுட்பக் குழு செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால், மேகதாது விவகாரத்தைத் தடுக்கவோ அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி மாதாந்திரப் பங்கு நீரைப் பெறவோ தவெக அரசால் முடியவில்லை என அவர் தெரிவித்தார். உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், வரும் ஜனவரி வரை தொடர்ச்சியாகத் தண்ணீர் திறந்தால்தான் சம்பா சாகுபடியைக் காப்பாற்ற முடியும் என்ற இக்கட்டான சூழலில், தற்போது மேட்டூர் அணையில் வெறும் 54 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளதாகக் கவலை தெரிவித்தார். இதனால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காகச் சாலை மறியலில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மக்களின் குடிநீர்ப் பிரச்சனையையும் விவசாயிகளின் பாசனப் பிரச்சனையையும் தீர்ப்பதை விடுத்து, கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் உற்சாகமாகப் பங்கேற்று வருவது '23-ஆம் புலிகேசியை' நினைவுபடுத்துவதாகக் கடுமையாக விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி, விளையாட்டுத்தனத்தைக் கைவிட்டு காவிரி தொழில்நுட்பக் குழுவின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!