×
 

சட்டமன்றத் தேர்தல் 2026..: சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர், புதுச்சேரி செல்வதற்கு முன்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழகத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கானத் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்கள் இன்று சென்னையில் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அஸ்ஸாம் மாநிலத் தேர்தல் ஆயத்தப் பணிகளை முடித்துக் கொண்டு, புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் அவர்களுடன், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விரிவான ஆலோசனை நடத்தினார். இதில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு மற்றும் வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பு விபரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். தமிழகப் பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மற்றும் உயர்மட்டப் போலிஸ் அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். தேர்தல் நேரத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, பதற்றமான வாக்குச் சாவடிகளின் பட்டியல் மற்றும் கூடுதல் படைகளை நிலைநிறுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஞானேஷ் குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இன்று மாலை புதுச்சேரிக்குச் செல்கிறது. அங்கு நாளை (பிப்ரவரி 26) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார். புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு, பிப்ரவரி 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தலைமைத் தேர்தல் ஆணையர் மீண்டும் தமிழகத்தில் தங்கி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் (SP) மாநில அளவிலான இறுதிக்கட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!

அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் ஆணையக் குழு நடத்தும் ஆய்வுகளின் அடிப்படையில், மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share