நெருங்கும் சட்டசபை தேர்தல்..!! தலைமை தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் விசிட்..!!
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் நாளை தமிழகம் வருகிறார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் அட்டவணை அடுத்த மாதம் (மார்ச்) முதல் அல்லது நடுப்பகுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்துத் தரப்பிலும் தீவிரமடைந்துள்ளன.
திமுக தலைமையிலான கூட்டணி ஒரு பக்கமும், அதிமுக தலைமையிலான கூட்டணி மறுபக்கமும் பலமாகக் களமிறங்கியுள்ளன. இதனுடன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுவதால், தமிழக தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம், கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை வேகப்படுத்தியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான உயர்மட்டக் குழு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறது. பிப்ரவரி 25ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் (பிப்ரவரி 25, 26, 27) இங்கு தங்கியிருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளனர்.
இதையும் படிங்க: COPY, PASTE அரசியல் அதிமுகவின் வாடிக்கை... இபிஎஸ்-ஐ பந்தாடிய முதல்வர் ஸ்டாலின்.!!
சென்னையில் தமிழக தேர்தல் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்படும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் விரிவான விவாதங்கள் நடைபெறும். இதன் மூலம் தேர்தல் நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள், சட்ட ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் மறு ஆய்வு செய்யப்படும்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பிற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். பதற்றம் நிலவும் தொகுதிகளில் துணை ராணுவப் படைகள் (CRPF உள்ளிட்டவை) நிறுத்தப்படும் வழக்கம் போல, முதற்கட்டமாக 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மார்ச் 10ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளனர். அதன்பின் தொடர்ச்சியாக மேலும் பல கம்பெனிகள் வரவழைக்கப்பட உள்ளன. இவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
தமிழகத்தில் பொதுவாக தேர்தல்கள் அமைதியான முறையில் நடைபெல்வது வழக்கம். இதனால், மற்ற மாநிலங்களைப் போல பல கட்டங்களாக இல்லாமல், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கேற்ப அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (பிப்ரவரி 23) தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்பின் தேர்தல் ஆணைய உயரதிகாரிகளின் வருகை தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. வாக்காளர்கள் எண்ணிக்கை 5.67 கோடியை எட்டியுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்தல், நான்கு முனைப் போட்டியால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி... ஏற்பாடுகள் மும்முரம்..! அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை..!!