கருப்பு உடை அணிந்து வாயில் கருப்பு ரிப்பன்! ரிப்பன் மாளிகையில் 11-வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
சென்னை ரிப்பன் மாளிகையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தித் தூய்மைப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து 11-வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணி நிரந்தரம், உரிய ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 9 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் இன்று 11-வது நாளாகக் கருப்பு உடை அணிந்தும், வாயில் கருப்பு ரிப்பன் கட்டியும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களைச் சேர்ந்த ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளை முன்வைத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாகத் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தின் 11-வது நாளான இன்று, தங்களது கோரிக்கைகளுக்கு அரசு இன்னும் செவிசாய்க்காததைக் கண்டிக்கும் வகையில், நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து பேரணியாக ரிப்பன் மாளிகை வளாகத்திற்குள் திரண்டு வந்தனர்.
அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கிற்கு மௌன மொழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாயில் கருப்பு ரிப்பனைக் கட்டிக்கொண்டு அமர்ந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடியாகப் போராட்டக் களத்திற்கு நேரில் வருகை தந்து, ஏழைத் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் எனப் பதாகைகளை ஏந்தி வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள், எங்கள் வியர்வையையும் உழைப்பையும் மட்டுமே நம்பி வாழும் எங்களின் நியாயமான 9 அம்சக் கோரிக்கைகளுக்கு இந்த அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்; முதலமைச்சர் நேரில் சந்தித்து உரிய உத்தரவாதம் அளிக்கும் வரை எங்கள் வாழ்வாதாரப் போராட்டம் ஓயாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தூய்மைப் பணியாளர்களின் இந்தத் தொடர் போராட்டத்தால் மாநகராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!