×
 

8-வது நாளாக தொடரும் போராட்டம்! ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து ஆர்ப்பாட்டம்!

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் 8-வது நாளாக விசிலூதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிரந்தரம், தகுதிக்கேற்ற ஊதிய உயர்வு, பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 9 அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பாகத் தூய்மைப் பணியாளர்கள் இன்று 8-வது நாளாகக் கழுத்தில் விசில் மாட்டிக்கொண்டு ஊதி நூதன முறையில் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சியின் மண்டலம் 4, 7 மற்றும் 8 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகத் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், போராட்டத்தின் 8-வது நாளான இன்று சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியிலிருந்து திரண்ட தூய்மைப் பணியாளர்கள், கழுத்தில் விசிலை மாட்டிக்கொண்டு, கேட்குதா... கேட்குதா... விசில் சத்தம் கேட்குதா?, எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்று! போன்ற அதிரடி முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து ரிப்பன் மாளிகை நுழைவாயிலை முற்றுகையிட்டனர்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! பிரதமர் மோடியின் படம் பொறித்த பலூன்களை உடைத்து காங்கிரஸ் போராட்டம்!

போராட்டக் களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தூய்மைப் பணியாளர்கள், தேர்தல் மேடைகளில் 'நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே' என உருக்கமாகப் பேசி வாக்குக் கேட்டார்கள்; இந்த புதிய ஆட்சி ஏழைத் தொழிலாளர்களான எங்களுக்குக் கைகொடுக்கும் என முழுமையாக நம்பி நாங்கள் வாக்களித்தோம். ஆனால் இன்றைக்கு நாங்கள் வீதியில் இறங்கி கதறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் நியாயமான 9 அம்சக் கோரிக்கைகளைக் கேட்க இதுவரை ஒரு அமைச்சரோ அல்லது உயர் அதிகாரிகளோ எங்களை நேரில் வந்து சந்திக்காத அவல நிலையே நீடிக்கிறது எனக் கண்ணீருடன் குமுறினர்.

தொடர்ந்து முதலமைச்சரின் அணுகுமுறை குறித்துக் கொதித்தெழுந்த பணியாளர்கள், பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் தொழிலதிபர்களையும் சந்திக்க முதலமைச்சருக்கு நேரம் இருக்கிறது; ஆனால், இரவும் பகலும் உழைக்கும் ஏழைத் தூய்மைப் பணியாளர்களின் அழுகுரலைக் கேட்க அவருக்கு நேரம் இல்லையா? ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், 8 நாட்களாகப் போராடும் எங்களை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. 

மக்கள் அளித்த வாக்குகளால்தான் அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளார் என்பதை மறந்துவிடக் கூடாது; எங்கள் வாழ்வாதாரக் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை ரிப்பன் மாளிகையை விட்டு அகல மாட்டோம், போராட்டம் ஓயாது எனத் திட்டவட்டமாக எச்சரித்தனர்.

இதையும் படிங்க: போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share