×
 

மக்களே.. இனி பார்க்கிங்கிற்கு 'NO CHARGE'.. சென்னை மாநகராட்சி சொன்ன குட் நியூஸ்..!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்களில் கட்டணமில்லாமல் வாகனங்களை இன்று முதல் நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

வந்தாரை வாழவைக்கும் சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார் பார்க்கிங் பிரச்சனை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஏப்ரல் 2024 நிலவரப்படி, மாநகரின் மக்கள் தொகை 1.5 கோடியைத் தாண்டியுள்ள நிலையில், சுமார் 8.95 லட்சம் கார்கள் மற்றும் 40.85 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர, மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கின்றன. 

தி.நகர், மயிலாப்பூர், அடையாறு, நங்கநல்லூர் போன்ற பகுதிகளில், தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் பொது இடங்களை ஆக்கிரமித்து, பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ளன. பல குடியிருப்பு வளாகங்களில் போதிய பார்க்கிங் இடவசதி இல்லாததால், மக்கள் தெருக்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இது அண்டை வீட்டாரிடையே மோதல்களை உருவாக்குகிறது. 

காவல் துறையினர், தடை செய்யப்பட்ட இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி, அபராதம் விதித்தாலும், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு தேவைப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 14,000 பார்க்கிங் இடங்களில், 5,000 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன, இது வாகன எண்ணிக்கைக்கு மிகவும் பற்றாக்குறையாக உள்ளது.

இதையும் படிங்க: ஆர்ப்பாட்டத்தில் சேதமான தடுப்புகள்.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. தவெக எடுத்த அதிரடி முடிவு..!

தீர்வாக, சென்னை மாநகராட்சி மற்றும் CUMTA ஆகியவை புதிய பார்க்கிங் கொள்கைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அண்ணா நகரில் மொபைல் ஆப் மூலம் பார்க்கிங் இடங்களை முன்பதிவு செய்யும் முயற்சி பரிசோதனை அடிப்படையில் நடைமுறையில் உள்ளது. மேலும், பல நிலை பார்க்கிங் கட்டமைப்புகளை உருவாக்கவும், பொது போக்குவரத்தை மேம்படுத்தவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இன்று முதல் பொதுமக்கள் எவ்வித கட்டணமுமின்றி தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பந்தம் ஜூலை 20, 2025 அன்று முடிவடைந்ததை அடுத்து, புதிய ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை இந்த இலவச வாகன நிறுத்த வசதி அமலில் இருக்கும்.

இதற்கு முன்பு, சென்னை மாநகராட்சியின் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணிகள் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது இந்த ஒப்பந்தம் முடிவடைந்துள்ளதால், மறு ஒப்பந்தம் வரும் வரை பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு, சென்னை மாநகரில் உள்ள அனைத்து மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களுக்கும் பொருந்தும்.

இந்த முடிவு பொதுமக்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வணிகப் பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், அண்ணாநகர் போன்ற இடங்களில் வாகன நிறுத்தத்திற்கு செலவு செய்ய வேண்டியிருந்த நிலையில், இந்த இலவச வசதி வரவேற்கத்தக்கதாக உள்ளது. மேலும், இது வாகன ஓட்டிகளுக்கு பொருளாதார சுமையைக் குறைப்பதுடன், சென்னையில் போக்குவரத்து மேலாண்மைக்கு உதவும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஒப்பந்தம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும், அதுவரை இந்த இலவச வாகன நிறுத்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புகார்கள் இருந்தால் பெருநகர சென்னை மாநகராட்சியில் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எதுக்கு எங்கள ஏமாத்துறீங்க? போராட்டத்தில் குதித்த பகுதி நேர ஆசிரியர்கள்... ஸ்தம்பித்தது போக்குவரத்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share