×
 

தமிழக அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! ஐகோர்ட்டில் புதிய வழக்குக்கு அனுமதி..!!

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களின் பதவியேற்பு விழா மே 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வில் முதலில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்பட்டதையடுத்து தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த வரிசை மாற்றம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது. 

இந்தச் சூழலில், சென்னையைச் சேர்ந்த அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அரசு நிகழ்ச்சிகளை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பது அவரது முக்கிய கோரிக்கை.

மனுவில், 1891ஆம் ஆண்டு தமிழறிஞர் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை இயற்றிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்நாட்டின் உணர்வு, கலாச்சாரம் மற்றும் அடையாளத்தின் அடையாளமாக விளங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக தமிழக அரசு நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டு, நிகழ்ச்சி முடிவில் தேசிய கீதத்துடன் நிறைவு பெறும் மரபு பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் ஜனவரி 28ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையைத் தொடர்ந்து, ‘வந்தே மாதரம்’ மற்றும் தேசிய கீதம் முதலில் இடம் பெறும் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இது தமிழர்களின் உணர்வை புண்படுத்துவதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடமா? ராமதாஸ் கண்டனம்! மரபு மீறிய செயல் என சாடல்!

மத்திய அரசின் சுற்றறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்றாலும், மாநில பாடலை முதலில் பாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “தமிழ்த்தாய் வாழ்த்து வெறும் சடங்கு அல்ல; அது தமிழர்களின் இரத்தத்தில் ஓடும் உணர்வு” என மனுவில் வலியுறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் இத்தகைய கலாச்சார மோதல்களைத் தவிர்க்க, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இடம்பெறச் செய்ய நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் சுற்றறிக்கையை நேரடியாக எதிர்த்து வழக்கு தொடராமல் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டு, சுற்றறிக்கையை எதிர்த்து புதிய வழக்கு தொடர அனுமதி கோரப்பட்டது.

நீதிபதிகள் இந்தக் கோரிக்கையை ஏற்று, மனுவை திரும்பப் பெறவும், மத்திய அரசின் சுற்றறிக்கையை எதிர்த்து புதிய வழக்குத் தொடரவும் அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு தமிழகத்தில் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு புதிய வழியைத் திறந்துள்ளது எனக் கருதப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தின் இடத்தை மீட்டெடுப்பதன் மூலம் மாநில கலாச்சார அடையாளத்தை உறுதிப்படுத்த முடியும் என பலரும் நம்புகின்றனர். 

இதையும் படிங்க: கோவில்களில் ₹500 கட்டண தரிசனத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share