மதுரை ஆதீனத்திற்கு எதிராக எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.. காவல்துறைக்கு ஐகோர்ட் ஆர்டர்..!!
மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சென்னை சைவ மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த மே 2ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்று கொண்டு இருந்தார். அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் பிரிவு சாலை வழியாக கடக்க முயன்ற போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். கள்ளக்குறிச்சி போலீசார் இது தொடர்பாக விசாரித்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.
மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே, கொலைக்கான எந்த சதியும் நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். மதுரை ஆதீனம் கார் விபத்து தொடர்பாக, பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை ஆதினத்தை கொல்ல சதி நடப்பதாக கூறுவது பொய் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரி வழக்கு.. தலைமை கால்நடை அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு..!!
உளுந்தூர்பேட்டையில் நடந்த விபத்து தொடர்பாக, போலீஸ் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது; ஒரு தரப்பாக இருக்கிறது. எதிர்தரப்பு வாகனத்தை பற்றியும், தடுப்புகளை தாண்டி வந்து அவர்கள் மோதியது பற்றியும், பதிவு எண் பொருத்தப்படாத வாகனம் என்று குற்றம் சாட்டியது பற்றியும் போலீஸ் அறிக்கையில் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது என்று மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து அயனாவரத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், சென்னை காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. அதைத் தொடர்ந்து சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. அவர்கள் மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், இரு வேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையை உண்டாக்கும் வகையில் செயல்படுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தவறான தகவல்களை பரப்புதல் என நான்கு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றார் மதுரை ஆதீனம். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை ஆதீனத்திடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கார் விபத்து விவகாரத்தை மத ரீதியாக சித்தரித்த விவகாரத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதீனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை ஆதீனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மதுரை ஆதீனம் தாக்கல் செய்த மனு குறித்து செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை..!!