இனி காலை 6 மணிக்கே மெட்ரோ! பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேரம் மாற்றம்!
பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வடபழனி இடையே மெட்ரோ ரயில்களின் சேவை காலை 6 மணிக்கே தொடங்கும் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட வழித்தடம் 4-ல் அமைந்துள்ள பூவிருந்தவல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைகள், பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 23 (வெள்ளிக்கிழமை) முதல் அதிகாலை 6.00 மணிக்கே தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், 15 கிலோமீட்டர் தூரத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களைக் கொண்ட இந்த புதிய வழித்தட சேவை கடந்த அக்டோபர் 11 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இச்சேவை தொடங்கியதில் இருந்து காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் அதிகாலையிலேயே பணிக்குச் செல்லும் பொதுமக்கள், மருத்துவமனை செல்வோர் மற்றும் கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மேலும், சேவை நேரத்தை அதிகாலைக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளும் புகார்களும் முன்வைக்கப்பட்டன. பயணிகளின் இந்த நியாயமான தேவையை ஏற்றுக்கொண்ட மெட்ரோ ரயில் நிர்வாகம், அக்டோபர் 23 முதல் ரயில்கள் தொடங்கும் நேரத்தைக் காலை 6.00 மணி என மாற்றியமைத்துள்ளது. இதன் மூலம் இரு முனையங்களிலிருந்தும் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வழக்கமான மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படும்.
இதையும் படிங்க: மெட்ரோ பள்ளம் முதல் போதைப்பொருள் வரை பொறுப்பேற்பாரா? திமுக-வை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!
இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையின்படி, திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான நாட்களில் காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும் நெரிசல் மிகுந்த நேரமாகக் (Peak Hours) கணக்கிடப்பட்டு 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதேபோன்று, காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரையிலும், காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் மற்றும் இரவு 8:00 மணி முதல் 9:00 மணி வரையிலும் 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வழக்கம்போல 15 நிமிட இடைவெளியில் சேவைகள் தொடரும் என்றும், இரு முனையங்களிலிருந்தும் கடைசி ரயில் இரவு 9:00 மணிக்குப் புறப்படும் என்பதால் பயணிகள் இதற்கேற்ப தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மெட்ரோவில் முதல் நாளே மாஸ்! 5 மணி நேரத்தில் 25,000 பேர் பயணம்! மக்கள் அமோக வரவேற்பு!