2 ஆம் கட்ட மெட்ரோ..! புதிய மைல்கல்..! சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவு.!
2 ஆம் கட்ட மெட்ரோவில் சுரங்கம் தோண்டும் பணி நிறைவடைந்தது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் வழித்தடம்-3 பணிகளில் முக்கியமான ஒரு மைல்கல்லை அடைந்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். சேத்துப்பட்டு மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி நிலையங்களுக்கு இடையேயான சுரங்கப் பாதை பணியை ‘காவிரி’ என்ற பெயர் கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இந்தப் பகுதி வழித்தடம்-3-ன் ஒரு முக்கியப் பிரிவாகும்.
மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை நீளும் இந்த வழித்தடத்தில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் பெரும் பகுதியை உள்ளடக்கியுள்ளன. சேத்துப்பட்டு-கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி இடையேயான சுரங்கப் பணியில் இரண்டு டிபிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மேல் பாதைக்கு ‘தாமிரபரணி’ என்ற இயந்திரமும், கீழ் பாதைக்கு ‘காவிரி’ என்ற இயந்திரமும் ஈடுபடுத்தப்பட்டன. இவை 2024-ல் பணியைத் தொடங்கின. தாமிரபரணி இயந்திரம் 2025 நவம்பர் 26-ஆம் தேதி தனது பணியை முடித்துவிட்டது.
அதன் தொடர்ச்சியாக காவிரி இயந்திரம் சேத்துப்பட்டில் இருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி நிலையம் வரை சுமார் 685 மீட்டர் நீளமுள்ள சுரங்கத்தை தோண்டி முடித்துள்ளது.இந்தப் பணியை 252 நாட்களில் காவிரி இயந்திரம் முடித்துள்ளது. பணியின் போது பல சவாலான பகுதிகளை இயந்திரம் கடந்து சென்றது. தெற்கு ரயில்வேயின் ஐந்து உயிருள்ள ரயில் பாதைகளுக்குக் கீழே, சேத்துப்பட்டு ஈகோ பார்க் ஏரிக்கு அடியில் மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள கட்டிடங்களுக்கு அடியில் சுரங்கம் அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சென்னைக்கு படை எடுக்கும் பிரதமர் மோடி - ராகுல்காந்தி! பலத்தை காட்ட தயாராகும் பாஜக - காங்.,!
ரயில் பாதைகளுக்குக் கீழே சுமார் 18 மீட்டர் ஆழத்திலும், ஏரி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்குக் கீழே 21 முதல் 26 மீட்டர் ஆழத்திலும் பணி நடைபெற்றது. மேலும், முதல் கட்ட மெட்ரோ சுரங்கப் பாதைகளுக்கு அருகே செல்லும்போது குறைந்தபட்சம் 6.1 மீட்டர் இடைவெளி பராமரிக்கப்பட்டது.பணி முழுவதும் தரை அமைப்பில் பெரிய அளவிலான சரிவு ஏற்படாமலும், ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமலும் முடிக்கப்பட்டுள்ளது. பணியின் போது பத்து முறை கட்டர்ஹெட் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சுரங்கப் பணியை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் செயல்படுத்தியுள்ளது. டியூ-02 ஒப்பந்தத்தின் கீழ் இது ஒன்பதாவது டிபிஎம் வெற்றி முன்னேற்றமாகும்.
இதையும் படிங்க: "மூளையை சிதறவிடுவோம்"..! கோர்ட் வாசலில் சபதம்... ஐஸ் ஹவுஸ் அஜித் கொலையின் அதிர்ச்சி பின்னணி..!