×
 

சென்னையில் ‘Red Zone’ அறிவிப்பு! சுதந்திர தினத்தை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை!

சுதந்திர தின விழா பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 14 மற்றும் 15 இல் சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாட்டின் 80-வது சுதந்திர தின விழா விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மாநிலத் தலைநகரான சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறை தரப்பில் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களுக்குச் சென்னையில் சில முக்கியப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வான்வெளிப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை பெருநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட, முதலமைச்சர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகம் வரை பயணிக்கும் பிரதான போக்குவரத்து வழித்தடங்கள் அனைத்தும் 'ரெட் ஜோன்' ஆக மாற்றப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பிட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட், பாரா கிளைடர்கள், பாரா மோட்டார்கள், ஹேங் கிளைடர்கள் மற்றும் ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்ட எவ்வித ஆளில்லா வான்வழி உபகரணங்களையும் பறக்கவிட முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திங்கள் முதல் எம்.எல்.ஏ-க்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே! சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி உத்தரவு!

அரசு சாா்பில் அதிகாரப்பூர்வமாகச் செய்யப்படும் வான்வழி படப்பிடிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்த்து, தனியாா்கள் அல்லது பிற அமைப்புகள் இக்கட்டுப்பாடுகளை மீறி ட்ரோன்களைப் பறக்கவிட்டால் அவர்கள் மீது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை எச்சரித்துள்ளது. அத்துடன், சென்னை சர்வதேச விமான நிலையம், முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் படையினருடன் இணைந்து பல அடுக்கு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  
 

இதையும் படிங்க: தாய்மார்களை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share