×
 

2 மாசத்துல 10 பேர் கைதா? ஆட்சியின் அலங்கோலங்களை மறைக்கப் பார்க்கிறாரா விஜய்? ஸ்டாலின் விட்ட அதிரடி சவால்!

ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களைக் கிரிமினல் சட்டங்களால் அடக்க நினைப்பதாகத் தவெக அரசைக் கண்டித்து வெளியான 'தி இந்து' நாளேட்டின் தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி, ஆட்சிக் கைதுகளுக்கு மக்களே பாடம்புகட்டுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களையும், சுட்டிக்காட்டல்களையும் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி ஒடுக்க நினைக்கும் தவெக அரசின் போக்கைக் கடுமையாகச் சாடி, 'தி இந்து' ஆங்கில நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தை மேற்கோள் காட்டி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாகக் விமர்சித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தவெக அரசுக்கு எதிராகப் பேசியதற்காகவும், விமர்சித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதற்காகவும் திமுகவின் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து 'தி இந்து' நாளேடு Accommodating Dissent என்ற தலைப்பில் காரசாரமான தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

'தி இந்து' பத்திரிகையின் தலையங்கப் பக்கத்தைப் பகிர்ந்து மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. ஆட்சிக்கு எதிரான நியாயமான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளையும், காவல்துறையையும் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் த.வெ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கைக் கடுமையாகச் சாடியுள்ளது 'தி இந்து' நாளேட்டின் இன்றைய தலையங்கம்.

இதையும் படிங்க: “யாரு பெருசுன்னு அடிச்சி காட்டு...” - ஜனநாயகன் பேனர் வைப்பதில் தவெக நிர்வாகிகளுக்குள் தகராறு... மா.செ. மருத்துவமனையில் அனுமதி...!

நம் முதலமைச்சருக்குப் புரியும் பாணியில் சொல்லவேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் முன்னணிப் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் 'நங்கு நங்கென்று' குட்டியிருக்கிறது. ஆட்சியின் சீர்கேடுகளையும் அலங்கோலங்களையும் இதுபோன்ற பழிவாங்கும் கைது நடவடிக்கைகளால் சரிக்கட்டி விடலாம் என்று இந்த அரசு எண்ணினால், தமிழ்நாட்டு மக்களே அந்த ஆணவத்திற்குச் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள்.

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் யூடியூபர்கள், சமூக வலைத்தளப் பதிவர்கள் மற்றும் எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கிரிமினல் அவதூறு வழக்குகளும், இணையதளக் குற்றப் பிரிவுகளும் பாயப்பாவது அதிகரித்து வருவதாகத் 'தி இந்து' தனது தலையங்கத்தில் கவலை தெரிவித்துள்ளது.  

அண்மையில் முதலமைச்சரை விமர்சித்ததாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொடர் கைதுகளும் தமிழக அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில்தான், 'தி இந்து' நாளேட்டின் தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் தவெக அரசுக்கு எதிரான தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளார்.  

இதையும் படிங்க: மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share