×
 

வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நிலையில் உள்ள இவர்கள் வெள்ள தடுப்பு, மழைநீர் தேங்கினால் உடனடியாக வெளியேற்றுதல், முன்னேற்பாடு மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.

இந்த நியமனம் மாநகரில் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்புகளை குறைப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உதவுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்தல், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், தேவையான இயந்திரங்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் ஆகியவை இவர்களின் முக்கிய பணிகளில் அடங்கும்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளை உடனடியாக ஏற்படுத்துவதும், போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்வதும் அவர்களின் கடமையாகும்.திருவொற்றியூர் மண்டலத்திற்கு ஜி.எஸ். சமீரன், மணலிக்கு குமரவேல் பாண்டியன், மாதவரத்திற்கு மேகநாத ரெட்டி, தண்டையார்பேட்டைக்கு கண்ணன், ராயபுரத்திற்கு ஜானி டாம் வர்கீஸ், திரு.வி.க. நகருக்கு பி. கணேசன், அம்பத்தூருக்கு ராமன், அண்ணாநகருக்கு ஸ்ரேயா பி. சிங், தேனாம்பேட்டைக்கு பிரதாப், கோடம்பாக்கத்திற்கு விசாகன், வளசரவாக்கத்திற்கு சிவஞானம், ஆலந்தூருக்கு பிரபாகர், அடையாருக்கு செந்தில் ராஜ், பெருங்குடிக்கு மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் சோழிங்கநல்லூருக்கு உமா மகேஸ்வரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

இவர்கள் அந்தந்த மண்டல அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மழைக்கால தயாரிப்புகளை மேற்பார்வையிடுவார்கள்.மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே மழைநீர் வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்தல், குழிகளை நிரப்புதல் மற்றும் தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கண்காணிப்பு அதிகாரிகளின் நியமனம் மூலம் இப்பணிகள் மேலும் விரைவுபடுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னை மக்கள் பாதுகாப்பாக இருக்க இந்த ஏற்பாடு முக்கியமானதாக அமைந்துள்ளது.

 

 

இதையும் படிங்க: நாங்கள் வேணுமா? அதிகாரிகள் வேணுமா? எங்கள் ஆதரவால்தான் அரசு நீடிக்கிறது! தவெகவுக்கு CPI(M) செக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share