77-ஆவது குடியரசு தின விழா: மெரினாவில் ஆளுநர் கொடியேற்றம்! 5 அடுக்கு பாதுகாப்புடன் 7,500 போலீசார் குவிப்பு!
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஆளுநர் கொடியேற்றவுள்ள நிலையில், 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26, 2026) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வரலாறு காணாத வகையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தொழிலாளர் சிலை அருகே நடைபெறும் அரசு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களின் உத்தரவின்படி, குடியரசு தின விழாவை முன்னிட்டுச் சென்னை முழுவதும் மொத்தம் 7,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதல் காவல் ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்களின் நேரடி கண்காணிப்பில், காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரின் முக்கிய நுழைவு வாயில்களான மாதவரம், மீனம்பாக்கம் மற்றும் துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுத் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் வணிக வளாகங்கள் எனப் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்களில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்துத் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. கடற்கரை பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் கூடுதல் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சி.பி.ஐ. விசாரணை நிறைவு: டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்டார் விஜய்!
குடியரசு தின விழாவை முன்னிட்டு, மெரினா கடற்கரை தொழிலாளர் சிலை பகுதி, ராஜ்பவன் சாலை மற்றும் முதல்வரின் இல்லத்திலிருந்து மெரினா செல்லும் வழித்தடங்கள் ஆகியவை ‘ரெட் ஸோன்’ (Red Zone) பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க விடக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். விழா அமைதியாக நடைபெறப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனச் சென்னை மாநகரக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: நம்ம ஊரு காத்து எப்படி இருக்கு? இனி டிஜிட்டல் போர்டுல லைவ் அப்டேட்.. சென்னை மாநகராட்சியின் சூப்பர் பிளான்!